கடமையைச் செவ்வனே செய்திருக்கிறதா?!
அஞ்சாம் பதிரா, நாயாட்டு, நிழல், படா, சாவேர், பூகன்விலியா என்று வித்தியாசமான த்ரில்லர் கதைகளில் தன்னைப் பொருத்திக் கொண்டவர் மலையாளத் திரை நட்சத்திரமான குஞ்சாக்கோ போபன்னா தான் கேஸ் கொடு, பீமண்ட வழி, அல்லு ராமேந்திரன், 2018 என்று வித்தியாசமான கதைகள் திரையில் உருவம் பெறக் காரணமானவர். அப்படிப்பட்டவர் ஒரு திரைப்படத்தில் மிகக்கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு உருவாகாதா? அதுவே, குஞ்சாக்கோ போபனின் ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’ படம் குறித்து சில முன்னுணர்தல்களை ஏற்படுத்தியது. officer on duty movie review
ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பில், ஷாஹி கபீர் எழுத்தாக்கத்தில், ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் பிரியாமணி, ஜெகதீஷ், விஷாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’ தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் திரைக்கதையைக் கொண்டிருக்கிறதா?

’ஆ.ஆ.ட்யூட்டி’ கதை! officer on duty movie review
தனிப்பட்ட வாழ்வில் சந்திக்கிற ஒரு அசம்பாவிதம் போலீஸ் அதிகாரியான ஹரிசங்கரைப் (குஞ்சாக்கோ போபன்) பெருமளவில் பாதிக்கிறது. அதுவும் மனரீதியான பாதிப்பு. அதே போன்ற நிகழ்வை நேரில் காண்கிறபோது அவர் கடுமையான உளைச்சலை எதிர்கொள்கிறார்.
ஆனால், அந்த சம்பவத்திற்கு முன்னதாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு, அவர் மீது துறைரீதியாக மிகக்கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வைக்கிறது.
இப்படிப்பட்ட நிலையை எதிர்கொண்ட ஹரிசங்கர் சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பணியில் சேர்கிறார். அப்போது, டெபுடி சூப்பரிண்டண்ட் ஆக இருந்த அவர் இன்ஸ்பெக்டர் ஆகப் பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மீண்டும் வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே, செயின் பறிப்பில் ஈடுபட்ட ஒரு பெண்மணியை அவர் தாக்குகிறார்.
அதன் தொடர்ச்சியாக, போலி நகையை அடகு வைத்ததாக ஒரு நபரை போலீசார் அவரிடம் அழைத்து வருகின்றனர்.
அவரது பெயர் சந்திரபாபு (ஜகதீஷ்). அவரோ தான் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனராக இருப்பதாகவும், இந்த செயினை குறிப்பிட்ட நகைக்கடையில் தனது மகளுக்குப் பிறந்தநாள் பரிசாக வாங்கியதாவும் தெரிவிக்கிறார்.
அன்றைய தினமே, சந்திரபாபுவின் மகளை நேரில் சந்திக்கிறார் ஹரிசங்கர். பார்த்த முதல் நொடியிலேயே, ஒரிஜினல் நகைக்குப் பதிலாக டூப்ளிகேட்டை மாற்றி வைத்தது அவர்தான் என்று கண்டுபிடித்து விடுகிறார். ‘நடந்தது என்ன’ என்று அவரிடம் கேட்கிறார்.
அப்போது, தன்னிடம் ஒரு ஆண் நெருங்கிப் பழகியதாகவும், அவர்தான் அந்த நகையை எடுத்துச் சென்றிருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கிறார்.
அது பற்றி விரிவாக விசாரிக்கும் நோக்கத்துடன், ‘நாளை உங்க பொண்ணை ஸ்டேஷனுக்கு அழைச்ச்சிட்டு வாங்க’ என்று சந்திரபாபுவிடம் சொல்கிறார் ஹரிசங்கர். ஆனால், அன்று மாலையே காவல் நிலையம் செல்லும் சந்திரபாபு ‘என் பொண்ணு இங்கல்லாம் வரமாட்டா. இப்பவே பயந்து போயிருக்கா’ என்கிறார்.
அப்போது, ‘உன் பொண்ணுக்கு ஒரு பையனோட பழக்கம் இருக்கு. அவன்கூட போனப்பதான் அவன் நகையை கொடுத்திருக்கா. அதனாலதான் டூப்ளிகேட் நகைய அவ மாத்தி வச்சிருக்கா’ என்கிறார் ஹரிசங்கர். அதனை ஏற்க மறுக்கிறார் சந்திரபாபு.
அன்றிரவு, சந்திரபாபுவின் மகள் தற்கொலை செய்துகொண்ட தகவல் ஹரிசங்கருக்குக் கிடைக்கிறது. அவரது வீட்டுக்கு நேரில் செல்கிறார்.
அப்போது, இன்னொரு பெண் இதே போன்று தற்கொலை செய்துகொண்ட காட்சிகள் ஹரிசங்கர் மனதில் நிழலாடுகின்றன. அப்பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு தான் அழுதது நினைவுக்கு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு வாங்கிய தங்கச்சங்கிலியை யாராவது நகைக்கடைகளில் அடகு வைத்திருக்கிறார்களா என்று கண்டறியத் தொடங்குகின்றனர் போலீசார். விசாரணையில், ஒரு அடகுக்கடையில் அது இருப்பது தெரிய வருகிறது. அதனோடு இன்னும் இரண்டு சங்கிலிகள் இருக்கின்றன.
அவற்றை வாங்கியது யார்? அந்த குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர்? அதனை அறியும்போது, அந்த தங்கசங்கிலியோடு சம்பந்தப்பட்ட சிலர் மரணித்திருப்பதைக் கண்டறிகிறார் ஹரிசங்கர்.
இந்தக் குற்றங்களின் பின்னிருப்பது யார்?
அந்த சங்கிலிகளை அடகு வைத்த நபரைக் கண்டுபிடிக்கின்றனர் போலீசார். அவரிடம் ஹரிசங்கர் விசாரணை மேற்கொள்கிறார்.
அப்போது, தான் வேலை பார்க்கும் ஜவுளிக்கடைக்கு வந்த பெண் ஒருவர் அணிந்த பேண்ட்டில் அந்த சங்கிலிகள் இருந்ததாகச் சொல்கிறார் கடையில் வேலை பார்க்கும் பெண்மணி.
அதன்பிறகு, ஜவுளிக்கடைக்கு வந்த பெண் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றறிகிறார் ஹரிசங்கர். அவரது பின்னணியில் ஒரு கும்பல் இருக்கிறது.
அதேநேரத்தில், தங்களில் ஒருவனாக இருந்தவனைக் கொன்றதற்குப் பழி தீர்க்க ஹரிசங்கரைத் தேடி அந்த கும்பல் கேரளாவுக்கு வருகிறது.
இளம்பெண்களைக் குறிவைத்து மோசடி செய்யும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? ஹரிசங்கருக்கு அக்கும்பலைச் சேர்ந்தவர்களை முன்னரே தெரியுமா? இக்கேள்விகளுக்குப் பரபரவென்று நகரும் காட்சிகள் வழியே பதில் சொல்கிறது ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’யின் பின்பாதி.

செறிவான உள்ளடக்கம்! officer on duty movie review
பெங்களூருவைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்வதும், அக்காட்சியை ஆண், பெண் அடங்கிய கும்பலொன்று கண்டு ரசிப்பதும் திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படுகிறது. வில்லன் கும்பலை அவ்வாறு சித்தரித்துவிட்டு வேறொரு பக்கம் திரைக்கதை திரும்பும்போது, ‘எத்தகைய கொடூரம் காத்திருக்கிறதோ’ என்று ரசிகர்களின் மனம் பதைபதைக்கும். அதுவே ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’யின் யுஎஸ்பி.
அந்த வகையில் ‘லாஜிக் மீறல்’களைக் கனகச்சிதமாக யோசித்து, அவை சிறிதும் தலைநீட்டாதவாறு திரைக்கதையாக்கத்தை மேற்கொண்டிருக்கிறார் ஷஹி கபீர்.
வித்தியாசமான கேமிரா கோணங்கள், வழக்கத்திற்கு மாறான நகர்வுகள், யதார்த்தம் என்று நினைக்கத்தக்க இடங்களைத் திரையில் காட்டியிருப்பது, இவற்றினூடே ‘ஹீரோயிசம்’ காட்டுகிற வகையிலான காட்சியாக்கம் என்று அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ்ராஜ்.
தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணைப் பார்த்ததும் குஞ்சாக்கோ பாத்திரம் ‘ஹாலுசினேஷனுக்கு’ உட்படுவதைக் காட்டிய இடத்தில் ஒரு பிளாஷ்பேக் வந்து போகிறது. அது ‘பிளாஷ்பேக்’ தான் என்பதை நாம் உணரச் சில நிமிடங்கள் ஆகிறது.
அது போன்ற குழப்படிகளைத் தவிர, திரையில் கதை தெளிவாகத் தெரிய, அதனை நாம் விறுவிறுப்பாக உணர வகை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ.
தயாரிப்பு வடிவமைப்பாளர் திலீப்நாத், ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் உட்படத் தொழில்நுட்ப உழைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்கள் அனைவருமே காட்சியின் தன்மைக்கு ஏற்ற பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
குறிப்பாக, ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை அடுத்தடுத்த காட்சிகளை இணைக்கும் தொடர்பிழையாகத் தெரிகிறது. காட்சியில் நிறைந்திருக்கும் உணர்வெழுச்சியையும் எளிதாகக் கடத்திவிடுகிறது.
ஒரு நட்சத்திர நடிகர் போலீஸ் அதிகாரியாகத் தோன்றுவது புதிதல்ல. ஆனால், ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரமாக ரசிகர்களுக்குத் தெரிய பெருந்திறமை வேண்டும். அதனைச் சாதித்திருக்கிறார் குஞ்சாக்கோ போபன்.
அடுத்த தலைமுறை இயக்குனர்களோடு, தொழில்நுட்பக் கலைஞர்களோடு இவர் எப்படி கலக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக மிக வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவது ‘அடிபொலி’.
பிரியாமணி இப்படத்தில் வரும் காட்சிகள் குறைவு. ஆனால், அக்காட்சிகளில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். அதே போன்று ஜெகதீஷ், வைஷாக் சங்கர் போன்றவர்களும் இதில் வந்து போகின்றனர்.
இதில் வில்லனாக விஷாக் நாயர் மற்றும் அவரது தோழமைகளாக விஷ்ணு வாரியர், லேயா மம்மென், ஐஸ்வர்யா ராஜ், ரம்ஜான் முகம்மது மற்றும் அமித் ஈபன் நடித்துள்ளனர். அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் வயிற்றில் புளியைக் கரைக்கும் ரகம்.
யதார்த்தமும் சினிமாத்தனமும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து நிற்கும் திரைக்கதைகளில் ‘செகண்ட் கிளைமேக்ஸ்’ என்பது ஒரு கட்டாயம். இப்படத்திலும் அது இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில், அது குஞ்சாக்கோ போபன் நடித்த பாத்திரத்தின் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு.
இந்தப் படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் உள்ளன. போலவே, காவல் துறை அத்துமீறலை நியாயப்படுத்துகிற சித்தரிப்புகளும் இருக்கின்றன. திரைக்கதையின் சில இடங்களில் அதற்கு எதிரான பார்வையைத் திரைக்கதையாசிரியரும் இயக்குனரும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஆனாலும், அவை சர்ச்சைகளை எழுப்புகிற விதத்தில் இருக்கின்றன.
அவற்றைப் புறந்தள்ளிவிட்டால், இந்த ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’ ரசிகர்களை வசீகரிக்கிற தனது கடமையைச் செவ்வனே மேற்கொள்ளும். வாரத்திற்கு ஒரு வெற்றிப்படத்தையாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது மலையாளத் திரையுலகம். அதனால், சுமார் வெற்றி படங்களும் கூட ஓடிடி வெளியீட்டில் பெருங்கவனத்தைப் பெறுகின்றன.
’நம்மூரில் இந்த சிரத்தையையும் மெனக்கெடலையும் எப்போது காண முடியும்’ என்றெண்ண வைக்கும் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ’ஆபிசர் ஆன் ட்யூட்டி’!