கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்…. மம்முட்டிக்காக மோகன்லால் பூஜை – முட்டிக் கொண்ட மனிதர்கள்!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் நடிகர் மம்முட்டிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. அவருக்கு புற்று நோய் தாக்கியுள்ளதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால்,இந்த தகவலை அவரின் செய்தி தொடர்பாளர்கள் மறுத்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் மம்முட்டிக்காக சபரிமலைக்கு விரதம் இருந்து நடிகர் மோகன்லால் சென்று வந்தார். இதற்காக, பம்பை வந்த மோகன்லாலுக்கு தேவசம் போர்டு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.mammootty

முதலில் பம்பையிலுள்ள கணபதி கோவிலில் வழிபாட்டை நடத்திய பிறகு, அங்கிருந்து சன்னிதானத்துக்கு நடந்து வந்தார். பின்னர், ஐயப்பனை மனமுருகி வழிபட்டார். மேலும், நடிகர் மம்முட்டிக்காகவும் அவர் உஷா பூஜை என்ற சிறப்பு வழிபாடு நடத்தினார். உஷா பூஜை என்பது சபரிமலையில் காலை 7.30 மணிக்கு நடைபெறும் வழிபாடு. ஐயப்பனுக்கு காலை அலங்காரங்கள் செய்த பிறகு முதன் முதலில் இந்த வழிபாடுதான் நடைபெறும். இந்த வழிபாட்டின் போதுதான், முகமது குட்டி விஷாக நட்சத்திரம் என்ற மம்முட்டியின் இயற்பெயர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். முன்னதாக, மம்முட்டியிடமும் சபரி மலையில் சிறப்பு அர்ச்சனை செய்வது குறித்து மோகன்லால் கூறி அனுமதி வாங்கியிருந்தார்.

இந்த நிலையில், கேரளாவின் பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அப்துல்லா, சபரி மலை ஐயப்பன் கோவிலில் மம்முட்டிக்காக சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்ட விவகாரத்தில் மம்முட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். மம்முட்டியின் ஒப்புதலுடன் மோகன்லால் இந்த காரியத்தை செய்துள்ளார். இஸ்லாமிய மதப்படி இது தவறானது. இதற்காக, மம்முட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். மம்முட்டியிடம் கூறாமல் மோகன்லால் இதை செய்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால், மம்முட்டி தெரிந்தே இதை அனுமதித்துள்ளார். இஸ்லாமியர்கள் அல்லாவை தவிர வேறு எந்த கடவுளையும் ஏற்றுக் கொள்வது குற்றம் ஆகும். மோகன்லால் அவரின் நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளார். அதை ,குறை சொல்ல ஒன்றுமில்லை. எனவே, மம்முட்டி விளக்கமளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் இஸ்லாமிய பெரியவர்கள் தலையிட வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சோசியல் மீடியாவில் பலரும் அப்துல்லாவை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் , சென்னையில் மார்ச் 27 ம் தேதி வெளியாகும் எம்புரான் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன்லாலிடத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன்லால், ‘பிரார்த்தனை என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் . விவாதத்திற்குரியதாக மாற்றக் கூடி விஷயம் அதுவல்ல. மக்கள் எப்போதும் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அது ஒரு நல்ல விஷயம். தேவசம் போர்டு ஒருவர் வழியாக மம்முட்டிக்காக தான் காணிக்கை செலுத்திய ரிசீப்ட் வெளியே கசிந்துள்ளது ‘ என்றார்.mammoo

இதற்கு பதிலளித்துள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு அளித்த விளக்கத்தில், ‘ மோகன்லால் மம்முட்டிக்கு செய்த சிறப்பு பூஜையின் ரிசீப்ட் நாங்கள் பொது வெளியில் பரப்பவில்லை. எங்கள் அதிகாரிகளும் யாருக்கும் அளிக்கவில்லை. ஒரிஜினல் ரிசீப்ட் மோகன்லால் தரப்பில் வந்து பணம் செலுத்தியவரிடத்தில்தான் கொடுக்கப்பட்டது. அவர்கள்தான் லீக் செய்திருக்க வேண்டும். பக்தர்களுக்கு வழங்கப்படும் ஒரிஜினல் காப்பியைதான் மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. எனவே, மோகன்லால் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். எங்கள் தரப்பு விளக்கத்தை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அனைத்து கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், சில மனிதர்கள் தான் சரியில்லை என்ற கருத்தை முன்வைத்தனர். அடுத்த நாளே, மனிதர்கள்தான் சரியில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மம்முட்டிக்கு பூஜை நடத்திய விவகாரத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.mammootty

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share