சென்னையை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் கடல் பாலம்: அமைச்சர் வேலு சொன்ன தகவல்!

Published On:

| By Kavi

கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரை கடல்பாலம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 10) ஐந்தாவது நாளாக கூடி நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரத்தின்போது, பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி, ‘இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடல்வழி பாலம் அமைக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு போர், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணத்தினால் இந்தியாவை இணைக்கும் பாலம் திட்டம் இன்றுவரை கனவு திட்டமாகவே உள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு வருகை தந்த போது, தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாதை அமைக்கலாம் என இந்தியாவின் சார்பில் தெரிவிக்கப்பட்டு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ்கோடி, அரிச்சல் பகுதிக்கு சென்று இங்கிருந்து பாலம் கட்டலாமா அல்லது கப்பல் விடலாமா என்று ஆய்வு செய்தோம். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை சுமார் 23 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த நிலையில் 2023 ஜூலை மாதம் மீண்டும் இந்தியாவுக்கு வருகை தந்த ரணில் விக்ரமசிங்கேவிடம், சாலை போக்குவரத்து பாலம் மற்றும் பைப் லைன் அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது.

பாலம் அமைக்கப்படுவது என்பது இரு நாட்டுக்கு இடையே உள்ள பிரச்சனை. எனவே இது தொடர்பாக முதல்வர் மூலம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து மும்பையில் அடல் பாலம் கட்டப்பட்டது போல் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “கலங்கரை விளக்கத்திலிருந்து நீலாங்கரை வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரமாகும். எனவே கடல்மேல் பாலம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பதற்கு, திட்ட அறிக்கையை மேற்கொள்வதற்கான பணிகளில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

2 சப்பாத்தி, காய்கறி : திருடர்களுடன் அடைக்கப்பட்ட ரூ. 2,500 கோடி அதிபதி!

கிச்சன் கீர்த்தனா : ரெட் வெல்வெட் பொங்கல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share