ஜப்பானில் இந்த ஆண்டு மே மாதம் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ளச் செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா, இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டுத் தாக்குதலால் பாதிப்படைந்த ஹிரோஷிமா நகருக்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
உலகத் தலைவர்கள் அனைவரும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணு ஆயுதத் தாக்குதல் ஏற்படுத்திய பாதிப்பை நேரில் பார்வையிட்டு, அணு ஆயுதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என ஜப்பான் பலமுறை கேட்டுக்கொண்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில், அமெரிக்கா ஹிரோஷிமா நகரத்தின்மேல் வீசிய அணுகுண்டால் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், நாகசாகி நகரத்தின்மேல் வீசிய இரண்டாவது அணுகுண்டால் 74 ஆயிரம் பேரும் பலியாகினர். அதன்பின்னர், அணுக் கதிர்வீச்சால் இந்த உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. ஒபாமாவின் இந்த வருகை வரலாற்று முக்கியத்துவம்பெறும் என்கிறது ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம்.