காலை அல்லது மாலை நேரச் சிற்றுண்டிக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த ஓட்ஸ் கட்லெட். ஓட்ஸ், பசியைப் போக்கும். இதயப் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து கலந்து இருப்பதால், சமச்சீர் உணவாக அமையும். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரலாம். மதிய உணவாகக் கொடுத்து அனுப்பலாம். தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
என்ன தேவை?
ஓட்ஸ் – ஒரு கப்
வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – 2
பொடியாக நறுக்கிய காலிஃபிளவர், சுரைக்காய், பீன்ஸ், துருவிய கேரட் – தலா கால் கப்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
உலர்ந்த மாங்காய்த் தூள் – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பிரெட் தூள் – கால் கப்
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் ஓட்ஸை வறுத்துக்கொள்ள வேண்டும். அதை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் காலிஃபிளவர், மசித்த உருளை, சுரைக்காய், பீன்ஸ், கேரட், சிவப்பு மிளகாய்த் தூள், மாங்காய்த் தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு, எண்ணெய் போட்டு, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைய வேண்டும். நமக்குப் பிடித்த வடிவில் இந்த மாவைப் பிடித்துக்கொண்டு, பிரெட் தூளில் பிரட்டி, தவாவில் மிதமான எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!