தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 18) காலை சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். O S Manian question and Duraimurugan answer
அப்போது வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியன், “அவ்வையின் வாக்கு அமுதமாகும். அரிய நீதிகள் நிரம்பியுள்ளன. சிக்கனச் சொற்கள் சமூக அக்கறை கொண்டவை, சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் கவிபாடியவர்… உள்ளம், உண்மை, மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி ,மூதுரை, ஞானகுரல், விநாயகர் அகவல், நாலு கோடி பாடல்கள், முதல் பாகம் சங்க கால அவ்வையார், இரண்டாம் பாகம் இடைக்கால அவ்வையார், மூன்றாம் பாகத்தில் 273 பாடல்கள் பள்ளி சிறார்களுக்காகவே பாடியிருக்கிறார்.
எனவே வேதாரண்யம் தொகுதியில் துளசியாபட்டினம் கிராமத்தில் அவ்வைக்கு கோயில் உள்ளது. அவ்வைக்கு கோயில் இருக்கும் ஒரே ஊர் இதுவாகும். 13 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அறிவுக்களஞ்சியம் அமைக்க அரசு முன்வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், “நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பரிசீலனை செய்யும்” என்று கூறினார்.”
இதையடுத்து ஓ.எஸ்.மணியன், “கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் புத்தகங்களை வைத்தாலே போதும். இதில் நிதிப்பிரச்னை எழவில்லை. அறம்செய்ய விரும்பு தொடங்கி அருமையான அற்புதமான பாடல்களை படைத்த அவ்வையாரின் புத்தகங்களை அங்கே வைக்க வேண்டும்” என்றார்.
அப்போது எழுந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “அவ்வையார் என்பது ஒருவரல்ல, அவ்வையார் ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என்று பாடியவர் ஒரு அவ்வையார். புறநானூறு பாடிய அவ்வையார் வேறு. எனவே உறுப்பினர் எந்த அவ்வையாரை குறிப்பிடுகிறார்” என்று கேள்வி எழுப்பியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்து பேசிய ஓ.எஸ்.மணியன், “துளசியாபட்டினம் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அவ்வையாருக்கு 13 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது என்பதை நீர்வளத் துறை அமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்குத்தான் அறிவுக் களஞ்சியம் வைக்க வேண்டும் என்று கேட்கிறேன்” என்றார்.
உடனே சபாநாயகர் அப்பாவு, “ ஐந்து அவ்வையார் இருக்கும் போது, அங்கே கோயிலில் இருக்கும் அவ்வையார் யார் என்பது தான் தற்போதைய கேள்வி” என்று கேட்க மீண்டும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு ஓ.எஸ்.மணியன், “இது நல்ல கேள்வி… ஒரு காலத்தில் பாடல்கள், கவி பாடியவர்களை புலவர்கள் என்று அழைத்தார்கள். அது ஆண் பாலுக்கு உரியச் சொல். ஆனால் பெண்கள் இதுபோன்று கவி பாடியிருந்தால் அவர்கள் எல்லோரையுமே அவ்வை என்றுதான் சொல்லப்படுகிறது”என்று பதிலளித்தார்.
அப்போது பேசிய துரைமுருகன், “நம்ம வீட்டில் வயதானவர்களை ஆயா என்று கூப்பிடுவது போலவா” என்று குறிப்பிட்டார்.
உடனே எழுந்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “இதுவரை அனைவரும் அவ்வையார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். தற்போது தான் அவ்வை யார் ? என்பதே ஒரு கேள்வி குறியாகியிருக்கிறது” என்று சொன்னதும் திமுக அமைச்சர்களும், உறுப்பினர்களும் கைத்தட்டி, குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
தொடர்ந்து, “அவ்வையார் என்பது பெண் இனத்திற்கு ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். விடுதலைப் போராட்ட வீரர்கள், தலைவர்கள், தமிழறிஞர்களுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபங்கள், படிப்பகங்களாக அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம். எனவே அவ்வையார் அறிவுக்களஞ்சியம் அமைகக் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய அமைச்ச்ர் சாமிநாதன், “என்னுடைய பாதி சுமையை குறைத்த நிதியமைச்சருக்கு நன்றி. எதிர்காலத்தில் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சட்டப்பேரவையில் இன்று நடந்த இந்த விவாதம் ஒரு பக்கம் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், அவ்வையார்… ஆயா என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.O S Manian question and Duraimurugan answer