ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 23) எதிர்வினையாற்றியுள்ளார். Panneerselvam reacts Edappadi comment
முன்னாள் முதல்வர் ஜெயலலிதவின் 77-ஆவது பிறந்தநாள் விழா நாளை (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில்,
“இன்றைக்கு, நம்முடைய கட்சி கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கட்சியைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியை புறக்கணித்ததில் இருந்து ஒன்றிணைப்பு குரல் இன்னும் வலுக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில், அதிமுக இணைப்பு சாத்தியமில்லை என்று எடப்பாடி தனது கடிதத்தின் மூலம் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர்” என்றார்.
அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லையா என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதில் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார் ஓ.பன்னீர் செல்வம். Panneerselvam reacts Edappadi comment