மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். O Panneerselvam Hindu Munnani
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்ற போது, அதனை எதிர்த்து அண்ணா பெயரில் அண்ணா திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கி கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து தொடர்ந்து 3 முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அமைத்தவர் எம்ஜிஆர். அவரைத் தொடர்ந்து அண்ணா காட்டிய வழியில் 4 முறை அதிமுக ஆட்சியை அமைத்தவர் ஜெயலலிதா.
தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து ‘முருக பக்தர்கள்’ மாநாடு என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.