காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரம் 35ஆவது வார்டில் வசித்து வந்தனர் சாயிரா பானு மற்றும் அவரது மகன் முஸ்தாக் அகமது. தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, இவர்கள் இருவரும் வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் இருந்து நாட்டு வெடிகள் வாங்கி வந்தனர். அவற்றை விற்பனை செய்யும் பொருட்டு, வீட்டில் வைத்து சரமாகக் கோர்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று (அக்டோபர் 23) வெடிகளைச் சரமாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறின. வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்துத் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள ஒரு வீட்டிலும் தீப்பற்றியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்தனர். இதில் முஸ்தாக் அகமது, சாய்ரா, மஸ்தான் உள்ளிட்ட 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாயிரா பானுவும் முஸ்தாக் அகமதுவும் அனுமதியின்றி வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்த மைதீன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மக்ருதீன் ஆகிய 2 பேர், இன்று கைது செய்யப்பட்டனர். வெடி மருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
