லலித் மோடி, விஜய் மல்லையா, அடுத்தது…? -ராஜ்

Published On:

| By Balaji

தான் வைத்திருக்கும் காணி நிலத்தில், விவசாயம் செய்ய வாங்கிய சிறு கடனைக் கட்டமுடியாத விவசாயிகள் கடன் கொடுத்த வங்கிகளின் நெருக்கடிகளுக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் நாடுதான் நமது இந்தியா.

வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாமல் விவசாயமும் நட்டமாகி, தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் கதைகள் வெளித்தெரியத் துவங்கியது 90-களில், இந்த 25 ஆண்டுகளில் விதர்பாவில் தொடங்கி தஞ்சை வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது.

ADVERTISEMENT

விவசாயிகளின் இந்த தற்கொலையில், விவசாயத்தில் நட்டம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும்கூட, கடன் கொடுத்த வங்கிகள் கொடுத்த துன்புறுத்தலும் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கியமான காரணம். ஆனால், இதே நாட்டில்தான் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்னும் பெயரில் தனியார் வங்கிகள் மக்கள் பணத்தை அள்ளிக் கொடுக்கின்றன சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு. இதோ, அபிவிருத்திக்கு என்றுசொல்லி, ஒரு லட்சம் கோடி கடனை வங்கிகளிலிருந்து பெற்றுக்கொண்டு அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடியிருக்கிறார் விஜய் மல்லையா என்ற பெருமுதலாளி. இதில் கவனத்தில்கொள்ளவேண்டிய இன்னொரு செய்தி என்னவென்றால், எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் இந்தப் பெருங்கடன் மல்லையாவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு, ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வழங்குவதற்கு, ஏழை விவசாய மக்களை அலைக்கழிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்தான் இப்படி கோடிகோடியாய் அள்ளிக் கொடுத்திருக்கின்றன.

மல்லையா போன்றவர்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இன்றி எப்படி இவ்வளவு பெரிய தொகையை கடனாகக் கொடுத்தீர்கள்? என்று உச்சநீதிமன்றம், பொதுத்துறை வங்கிகள் சார்பாக வாதாடிய அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கியிடம் கேட்டதற்கு, ‘‘நாங்கள் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் முத்திரை மற்றும் வணிகச் சின்னத்தை பார்த்து வழங்கினோம்’’ என்று பதிலளித்துள்ளார். ஒரு பொதுத்துறை வங்கியில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்பெற ஒரு முத்திரை மட்டுமே போதுமா?

ADVERTISEMENT

ஈமு கோழி வளர்ப்பு போன்ற மோசடிகளில், சராசரி மக்கள் சிக்கிச் சீரழிவது பரிதாபத்துக்குரியது. ஆனால், ஒரு அரசு தனது முட்டாள்த்தனத்தை பறைசாற்றுவதை ரசிக்க முடிகிறதா?

ADVERTISEMENT

மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட நிறுவனம். ஊழியர்களுக்குச் சம்பளம் தராமலும், விமானங்களைப் பறக்கவிடாமலும் அப்போதே கிங்ஃபிஷர் படுத்தது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் வணிக முத்திரையின்மீது நம்பிக்கை வைத்ததாக அரசு வழக்கறிஞர் கூறுவதை ஏற்க முடிகிறதா? அவருடைய சொத்துகளின் மொத்த மதிப்பு, கடன் தொகையைவிடவும் அதிகம் என்று நீதிமன்றத்தில் சமாளிக்க முயன்றிருக்கிறார், முகுல் ரோகத்கி. பிறகு, ஏன் தயக்கம்? என்று நீதிமன்றம் கேட்டதற்கு, அந்த சொத்துகள் இந்திய அரசால் பறிமுதல் செய்ய இயலாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று, தெரிவித்திருக்கிறார். பெயருக்கு ஒரு எச்சரிக்கை நோட்டீசை அவருடைய நிறுவனத்துக்கு வழங்கி, பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறது நீதிமன்றம். ‘நாங்கள் விஜய் மல்லையாவின் ரத்தத்துக்கு அலையவில்லை. அவரிடம் அமர்ந்து பேசி பணத்தை மீட்கும் வழிமுறைகளை ஆலோசிக்க விரும்புகிறோம்’ என்றிருக்கிறார் ரோகத்கி.

ஆனால் வாங்கிய கடனை கட்டமுடியாத சிறு விவசாயியின் கடன் தொகைக்கு விவசாயிகளின் குருவி வீட்டையும், காளை மாட்டையும் ஜப்தி செய்யும் வங்கிகளின் நடவடிக்கையோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால், அரசு வழக்கறிஞரின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் அபத்தம் வெளிப்படும்.

பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் மத்திய பாஜக அரசுமீது, எந்த ஊழல் புகாரும் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். ஆனால், விஜய் மல்லையா தப்பிக்க அனுமதிக்கப்பட்டது, ஊழல் தொடர்பான பிரதமரின் அறம்சார்ந்த உயர்நிலைமீது பெருத்த சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றன. ஒரு டஜன் பெட்டிப் படுக்கைகளுடன் அவர், இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறார். எனவே மல்லையா, மறுபடியும் திரும்ப வருவாரா? என்ற கேள்வி பூதாகரமாக எழுந்திருக்கிறது. லலித் மோடி இங்கிலாந்துக்குத் தப்பித்தது, பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்கு, மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியது, லலித் மோடியை மத்திய பாஜக அமைச்சர்கள் ஆதரித்து நின்றது ஆகியவை நமது மனக்கண்ணில் வந்து மறைகின்றன. இன்றும், விஜய் மல்லையாவுக்காக ஊடகங்களில் வாதிடுபவர்கள் யாரென்று பார்த்தால், அவர்கள் பாஜக-வினராகவே இருக்கின்றனர். ஆடிட்டர்கள், தொழில் ஆலோசகர்கள் என்ற பெயரில் தமது இந்துத்துவ அடையாளங்களை தற்காலிகமாகத் துறந்து, விஜய் மல்லையாவுக்காக வாதிடுவது குறித்து அவர்கள் கூச்சம் அடையவில்லை.

காத்திரமான வேளாண் கொள்கை இல்லாத நமது நாட்டில், வேளாண் தொழிலின் நசிவு காரணமாக அரசின் உதவிக்கு கையேந்தி அவமானத்துக்குள்ளாகி மடிகிறார்கள் விவசாயிகள். ஆனால், சாதகமான சூழலை அமைத்துக் கொடுத்தும், அரசின் மானியத்தை ஏப்பமிட்டு, எந்தவிதமான அறநெறியையும் கடைப்பிடிக்க முன்வரவில்லை; மல்லையா போன்ற பெருமுதலாளிகள்.

இந்த பட்ஜெட்டில் மட்டும் ஏழு லட்சம் கோடி வரிச்சலுகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சமூகநலத் திட்டங்களுக்குச் செலவிடப்படுவதற்கு வெறும் ஒன்றரை லட்சம் கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பெரும் பிளவின் ஒருபுறத்தில் நிற்கப் பணிக்கப்பட்டிருக்கும் மக்கள், ஜெட் விமானத்தில் பறந்த விஜய் மல்லையாவை இப்போதுபோலவே, எப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share