மோடியும் விசாரிக்கப்படுவார் : கே.வி தாமஸ்

Published On:

| By Balaji

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமர் மோடியை விசாரிப்போம் என்று நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இந்த அறிவிப்பால் நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைத் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்கு தணிக்கை குழு சரமாரியான கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான முடிவை எடுத்தது யார்? எவ்வளவு பணம் இதுவரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது? பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்க விதிமுறைகளில் அனுமதி உள்ளதா? ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து 20-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், நிதி துறை செயலர் அசோக் லாவசா, பொருளாதாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பொது கணக்கு குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கே.வி.தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது , ‘‘ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்துக்கு சில நாட்கள் முன்பாகவே அவர்கள் பதில் அளிக்கவேண்டும். இந்த பதில்கள் பொது கணக்கு குழுவில் விவாதிக்கப்படும்’’ என்றார். மேலும் இப்பிரச்சினையில் தொடர்புடைய அத்தனை பேரையும் நேரில் அழைத்து விசாரிக்க இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. இக்குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தால் பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இருவரையும் அழைத்து விசாரிப்போம்’’ இவ்வாறு அவர் கூறினார்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share