பழிக்குப் பழி வாங்கிய இலங்கை!

Published On:

| By Balaji

நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு டி-20 தொடரில் நேற்று (மார்ச் 16) நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு டி-20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. நேற்றைய போட்டியில் வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டிருந்தால், அந்த அணி கூடுதல் பலம் பெற்றது. இந்த போட்டியும் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதே மைதானத்தில் தான் கடந்த சனிக்கிழமை (மார்ச் 10) வங்கதேச அணி 215 ரன்களைச் சேர்த்து இலங்கை அணியை வீழ்த்தியதை ரசிகர்கள் மறந்திருக்க இயலாது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் சேஸிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதலில் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியைத் திணறடித்தது. அதன்படி முதல் 10 ஓவர்களில் இலங்கை அணி 41 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த குசால் பெரேரா (61) மற்றும் திசேரா பெரேரா (58) இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை பெற்றது. எனவே 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். இலங்கை அணியுடன் கடைசியாக 215 ரன்களை சேஸ் செய்த பொது வங்கதேச அணிக்கு பெரிதும் உதவிய முஸ்தபிசூர் ரஹீம் (28) இந்த போட்டியில் ஏமாற்றமளித்தார்.

வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி தடுமாறியது. அப்போது களமிறங்கிய அணியின் கேப்டன் ஷஹிப் அல் ஹசன் நம்பிக்கை அளித்தார். இருப்பினும் அவர் உடானா வீசிய 18ஆவது ஓவரில் தனன்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரது விக்கெட்டை வீழ்த்திய போது தனன்ஜெயா பாம்பு நடனம் ஆடி வங்கதேச அணியை கிண்டல் செய்தார்.

ADVERTISEMENT

இலங்கை வங்கதேசம் அணிகள் மோதிய கடைசி போட்டியில் 215 ரன்களை சேஸ் செய்த பொழுது முஸ்தபிசூர் ரஹீம் பாம்பு நடனம் ஆடியது இணையத்தில் வைரலானது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஷஹிப் விக்கெட்டினை வீழ்த்தியதற்கு இலங்கை வீரர் அதனை செய்து காண்பித்தார். அதனைத் தொடர்ந்து திசாரா பெரேரா வீசிய 19 ஆவது ஓவரிலும் இரண்டு விக்கெட்டுகள் விழ அதனை இலங்கை ரசிகர்கள் அனைவரும் பாம்பு நடனம் ஆடி கொண்டாடி, வங்கதேச வீரர்களை கிண்டல் செய்தனர்.

ADVERTISEMENT

இருப்பினும் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலை நீடித்த பொழுது அதனையும் தாண்டி பல சுவாரஸ்யங்கள் நடைபெற்றது. முதல் இரண்டு பந்துகளையும் பவுன்சராக வீசிய உடானா முஸ்தபிசூரை ரன் அவுட் ஆக்கினார். ஆனால் இரண்டு பந்துகள் தலைக்கு மேல் பவுன்சர்களாக சென்றதால் அதனை நோ-பால் என அறிவிக்க வேண்டுமென வங்கதேச அணி வீரர்கள் நீண்ட நேரம் நடுவரிடம் போராடி வந்தனர். இதனால் இரு அணி வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நீண்ட நேரம் நீடித்த இந்த குழப்பத்திற்கு பின்னர் மூன்றாவது நடுவர் தலைக்கு மேல் முதல் பந்து செல்லாத காரணத்தால், நோ பால் தர இயலாது என அறிவித்தார். எனவே 4 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் வங்கதேச அணி ஆட்டத்தை தொடர்ந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நிலைத்து நின்று விளையாடி வந்த மொஹமதுல்லா கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து, 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலைக்கு அணியை கொண்டு சென்றார். பின்னர் 2 பந்துகளில் 6 ரன்கள் சேர்த்தால் வெற்றி என இருந்த நிலையில் உடானா வீசிய பந்தினை சிக்ஸருக்கு அனுப்பி வங்கதேச அணியை வெற்றி பெற்ற செய்தார்.

இதனால் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அனைத்து வங்கதேச அணி வீரர்களில் மைதானத்தில் பாம்பு நடனம் ஆடினர். இந்த வெற்றியின் மூலம் நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு டி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் பலபரிட்சை நடத்த உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share