ஆயிரக்கணக்கான விவசாயிகள் அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியில் பேரணியாகச் சென்றனர். இவர்கள் அரசிடம் 21 கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதில் பெரும்பாலான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த அரசு, வேளாண் கடன் தள்ளுபடியை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை.
வேளாண் கடன் தள்ளுபடி என்பது இங்கு விவசாயிகள் வழக்கமாக முன்வைக்கும் கோரிக்கையாகிவிட்டது. எல்லாக் கட்சிகளுக்கும் நிரந்தரமான தேர்தல் வாக்குறுதியாகவும் இது மாறிவிட்டது. இந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் கூட காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனதா தளம் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்றால் வேளாண் கடனைத் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்திருந்தன. இந்தத் தேர்தலுக்கு முன்பும் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன.
மோசமான பருவமழை, உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகளின் வருவாய் சரிந்து வருகிறது. இதனால் கடன் தேவை அதிகரித்துள்ளது. வேளாண் கடன்களும் முன்பைக் காட்டிலும் இப்போது எளிமையாகக் கிடைக்கிறது. தற்போது வேளாண் துறையில் ஈடுபட்டுள்ள சரிபாதிக் குடும்பங்களுக்கு கடன் சுமை உள்ளது.
இப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் வேளாண் கடன் தள்ளுபடி குறித்த பேச்சுகள் எழாமல் இருக்காது. மகாராஷ்டிராவில் விவசாயிகள் மிகுந்த எழுச்சியோடு அண்மையில் நடத்திய மிகப்பெரிய பேரணி அம்மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் விதமாக வேளாண் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தக் கடன்களை நீண்டகால அடிப்படையிலான கடன்களாக மாற்றினால் விவசாயிகளுக்கு திருப்பிச் செலுத்துவதில் இருக்கும் சுமையைக் குறைக்கலாம்.
ஆனால் அவர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத் திட்டங்கள், சேமிப்புக் கிடங்குகள், கிராமங்களுக்கான முழுமையான மின் இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றை அளிப்பதும் அவசியமாகும். இதற்கு உரிய முயற்சியும், போதிய காலமும் தேவைப்படுகிறது. விவசாயிகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய கடன் சுமையிலிருந்து உடனடித் தீர்வு கிடைக்க அவர்களுக்குக் கடன் தள்ளுபடி ஒரு எளிமையான வழியாக இருக்கிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2009ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.70,000 கோடி அளவிலான வேளாண் கடனைத் தள்ளுபடி செய்தது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வேளாண் துறையைச் சார்ந்துதான் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறிவிட இயலாது. அதேநேரத்தில் வேளாண் கடனை உரிய நேரத்தில் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியிலும் கடன் வழங்கிய நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இது விவசாயிகளுக்கு அழுத்தங்களை மேலும் அதிகரிக்கிறது. இத்தகைய காரணத்தால் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகள் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். அதனால்தான் விவசாயிகள் கடன் தள்ளுபடியை எப்போதும் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்.
நன்றி: [டைம்ஸ் ஆஃப் இந்தியா](https://timesofindia.indiatimes.com/business/india-business/why-farm-loan-waiver-is-always-in-demand/articleshow/66055017.cms),