குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு மற்றும் கடன் தள்ளுபடிகளால் கிராமப்புறங்களுக்கான தேவை உயரும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இதுகுறித்து *பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லின்ச்* வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் மாதங்களில் கிராமப்புற இந்தியாவுக்கான தேவைகள் அதிகரிக்கும். கிராமப்புறச் சந்தைகள் சார்ந்த முதலீடுகளும் அதிகரிக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை உயரும். இந்த நிதியாண்டில் தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான சில்லறைப் பணவீக்கம் 5.6 விழுக்காடாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 2.1 விழுக்காடாக இருந்தது. நடப்பு காரிஃப் பருவத்தில் விவசாயிகளின் வருவாய் 14.5 விழுக்காடு ஏற்றத்தைக் காணும் என்று மதிப்பிடப்படுகிறது. இது முந்தைய ராபி பருவத்தில் 11.6 விழுக்காடாக இருந்தது. வேளாண் கடன் தள்ளுபடி 40 பில்லியன் டாலராக அதிகரிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.