இரட்டை இலை: தினகரன் கோரிக்கை நிராகரிப்பு!

Published On:

| By Balaji

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று கடந்த மாதம் 28ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்றும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும், இடைக்காலமாகத் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குக்கர் சின்னம் தொடர்பான தினகரன் தரப்பு வைத்த கோரிக்கையில், “நாங்கள் அதிமுகவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சின்னத்தைத்தான் கேட்கிறோம். அதற்கும் எடப்பாடி-பன்னீர் தரப்பு முட்டுக்கட்டை போடுகிறது. தேர்தல் காலம் என்பதால் நாங்கள் வாக்கு கேட்கச் செல்ல வேண்டும், எனவே எங்களுக்கான ஒரு சின்னத்தை கொடுங்கள்” என்று வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக வரும் 25ஆம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படுமா என்பது வரும் 25ஆம் தேதிக்குள் தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share