கோவையில் நேற்று இரவு கொட்டும் பணியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10.10.2023 அன்று நடைபெற்ற டி.எம்.எஸ். முற்றுகை போராட்டத்திற்கு பின், சட்டமன்றத்தில் துறை அமைச்சர் புதிய பணியிடங்களை உருவாக்கி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த உறுதிகள் இதுவரை நிறைவேறவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து போராடிய செவிலியர்களை நேற்று சென்னையில் காவல்துறையினர் கைது செய்ததற்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டும் பனியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். சில செவிலியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலையிலும் சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்ச மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
