நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை நேற்று (நவம்பர் 21) இரவு சந்தித்து பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இயங்க தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் புது வரவாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் குதித்துள்ளது. விஜய் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தது முதல் சீமான் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவு கொடுத்து வந்தார்.
இந்தநிலையில், அண்மையில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இரண்டு கண்கள் என்று விஜய் தனது கொள்கையை அறிவித்தார். இதற்கு சீமான் கடுமையாக எதிர்வினையாற்றினார். சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
இந்தசூழலில், ரஜினிகாந்தை சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு சீமான் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல், விஜய் வருகை, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். பின்னர் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார். ரஜினி கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததும் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
???? + ???????? pic.twitter.com/aesmlXQZr2
— Duraimurugan (@Saattaidurai) November 21, 2024
குறிப்பாக, “தமிழ் மண்ணை சேர்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் நடிக்கலாம். ஆனால், முதல்வராக தமிழ்நாட்டை ஆளக்கூடாது. இது மன்னர் ஆட்சி முறை அல்ல. நாங்கள் அடிமையாக இருக்க முடியாது” என்று ரஜினியின் அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்தார்.
ஏற்கனவே ரஜினி – விஜய் ரசிகர்கள் இணையத்தில் தீவிரமாக மோதி வரும் நிலையில், சீமானின் இந்த சந்திப்பு ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் உத்தி என்பது போல புலி + கழுகு புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி உடனான சீமானின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசுப் பள்ளி சத்துணவில் புழுக்கள்: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
டாப் 10 நியூஸ்: திமுக எம்.பி-க்கள் கூட்டம் முதல் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரை!
Comments are closed.