நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்ட நிலையில், விரைவில் தன்னுடைய முடிவை அறிவிப்பதாக செய்தியாளர்களிடம் நேற்று (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார். Anbil Mahesh Aadhav try
இதனால், அவர் எந்த கட்சிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. காளியம்மாளை திமுகவுக்குள் கொண்டு வர பலத்த முயற்சிகள் நடந்து வருவதாக திமுகவுக்கு காளியம்மாள் வைத்த திடீர் டிமாண்ட் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், வருகிற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சீட்டு வேண்டுமென்றும், அப்படி இல்லையென்றால் வருகிற ராஜ்யசபா தேர்தலில் மீனவர் சமுதாய பிரதிநிதித்துவத்தை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் காளியம்மாள் தரப்பு திமுகவிடம் கோரிக்கைகள் வைத்திருக்கிறது என்று தெரிவித்திருந்தோம்.

இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் தற்போது மாணவரணி தலைவராக இருக்கும் ராஜீவ் காந்தி ஆகியோர் காளியம்மாளை திமுக பக்கம் இழுக்க தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் காளியம்மாளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காளியம்மாளை தொடர்புகொண்ட புஸ்ஸி ஆனந்த், தங்கள் கட்சிக்கு வரும்படி அவரை வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜூனா அண்மையில் காளியம்மாளை சென்னையில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, “நீங்கள் திமுகவில் இணைந்தால் அந்த கட்சிக்கு தான் பலன். கடந்த 10 வருடங்களாக திமுகவையும் அந்த கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள். திமுகவில் இணைந்தால் அந்த வீடியோக்களை இணையத்தில் நாம் தமிழர் கட்சியினர் ட்ரெண்ட் செய்வார்கள். அதனால் உங்கள் எதிர்கால அரசியலுக்கு பாதிப்பு வரக்கூடும். தமிழக வெற்றிக் கழகம் புதிய கட்சி. உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு நீண்ட காலம் பலனளிக்கும். இங்கே வந்தால் உங்களுக்கு கெளரவமான பதவி வழங்கப்படும். நான் விஜய்யிடம் இதுதொடர்பாக பேசுகிறேன்” என்று காளியம்மாளுக்கு ஆதவ் அர்ஜூனா உறுதியளித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் காளியம்மாளை கட்சியில் சேர்க்க ஆதவ் அர்ஜுனா தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
ஒரு பக்கம் அன்பில் மகேஷ், இன்னொரு பக்கம் ஆதவ் ஆகியோர் காளியம்மாளை தங்கள் கட்சியில் சேர்ப்பதற்காக தீவிரம் காட்டி வருகின்றனர். Anbil Mahesh Aadhav try