நாம் தமிழர் கட்சியில் இருந்து 3,000 பேர் விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜனவரி 24) திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, திமுக துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

அந்தவகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் திமுகவில் இன்று இணைந்தனர். மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், நெல்லை கண்ணன், சுப்பையா பாண்டியன், கலியபெருமாள், நாமக்கல் வினோத், நாகூர் கனி, முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், மண்டல செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என 30 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அண்ணா அறிவாயலம் கலைஞர் அரங்கிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு புத்தகம், சால்வை, பெரியார் சிலைகள் வழங்கி நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து கெளரவித்தார்.