தேர்வு அப்டேட்களுக்கு புதிய முயற்சி
தேசிய தேர்வுகள் முகமை (NTA), ஜேஇஇ (JEE), நீட் (NEET), சியூஇடி (CUET) போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுகளுக்கான தகவல்களை நேரடியாக மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சமூக ஊடக பக்கங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்த புதிய முயற்சி, மாணவர்கள் தேர்வு தொடர்பான தகவல்களை விரைவாகவும் எளிதாகவும் பெற உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
என்ன தகவல்கள் கிடைக்கும்?
இந்த சமூக ஊடக பக்கங்கள் மூலம் மாணவர்கள், ஹால் டிக்கெட் வெளியீடு, தேர்வு தேதி அறிவிப்புகள், முடிவுகள் (ரிசல்ட்), முக்கிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்ற அனைத்து அப்டேட்களையும் ஒரே இடத்தில் பெற முடியும் என என்டிஏ தெரிவித்துள்ளது.
மேலும், “ரியல்-டைம் அப்டேட்கள்” மற்றும் அலெர்ட்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
முன்னதாக, மாணவர்கள் தேர்வு தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளங்களை தொடர்ந்து சரிபார்க்க வேண்டியிருந்தது ஆனால்,இணையதளத்தில் அதிகமான பார்வையாளர்கள், தாமதமான தகவல் அணுகல் போன்ற சிக்கல்கள் இருந்தன.
இதனை சரிசெய்ய, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடக தளங்களை தேர்வு செய்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவறான தகவல்களுக்கு தடுப்பு
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை கட்டுப்படுத்துவதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலம் சரியான தகவல் நேரடியாக வழங்கப்படும் வதந்திகள் உடனடியாக மறுக்கப்படும் என்பதால், மாணவர்கள் நம்பகமான தகவலை பெற முடியும்.
எந்த தேர்வுகள் இதில் அடங்கும்?
இந்த சமூக ஊடக பக்கங்கள், ஜேஇஇ மேன், நீட் யுஜி, சியூஇடி போன்ற தேசிய அளவிலான முக்கிய நுழைவுத் தேர்வுகளுக்கான தகவல்களை உள்ளடக்கும்.
மாணவர்களுக்கு அறிவுரை
என்டிஏ, மாணவர்கள் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட பக்கங்களை மட்டுமே பின்தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது போலியான கணக்குகள் மூலம் ஏமாற்றப்படுவதை தவிர்க்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்களில் என்டிஏ கால் பதித்திருப்பது, தேர்வு தகவல் பரிமாற்றத்தில் ஒரு புதிய கட்டத்தை உருவாக்குகிறது. மாணவர்கள் உடனடி மற்றும் நம்பகமான தகவலை பெறும் சூழலை உருவாக்கும் இந்த முயற்சி, போட்டித் தேர்வுகளுக்கான தகவல் அணுகலை மேலும் எளிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
