டிஜிட்டல் திண்ணை: என்.ஆர்.சி – எடப்பாடி நடத்திய முக்கிய ஆலோசனை!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“இன்று தமிழகத்தைத் தாக்கிய மெகா கொடூரமான சுனாமியின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம். 2004 ஆம் ஆண்டு இதே தினத்தில்தான், தமிழகக் கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கி ஆயிரக்கணக்கான உயிர்களை அள்ளிக் கொண்டு போனது. இன்றுதான் சுனாமி நாள் என்று அறிந்தால் கடல் கூட அலைகளை ஒரு நிமிடம் நிறுத்தி அஞ்சலி செலுத்திவிடும். ஆனால் அதற்குத்தான் தெரியாதே… நாம் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்” என்ற மெசேஜ் அனுப்பிய வாட்ஸ் அப், சரியாக ஒரு நிமிடம் கழித்து மீண்டும் தன் செய்தி மெசேஜை அனுப்பியது.

ADVERTISEMENT

“உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றோடு முடிந்தது. நாளை 27 ஆம் தேதி தேர்தல் என்ற நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுவாக தேர்தல் நிலவரம் குறித்து அமைச்சர்களிடையே பேசியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் வைத்தால் அதிமுகவே பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையோடுதான் தேர்தலை அறிவித்தார் எடப்பாடி. ஆனால் அமைச்சர்கள் கூறிய விஷயங்களை எல்லாம் கேட்டபோது கிராமப் பகுதிகள் வரை எவ்வாறு குடியுரிமைத் திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சியும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி.

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டம் அதிமுகவால் மட்டுமே நிறைவேறியது என்பதையும் இதுவே என்.ஆர்.சி. கொண்டுவருவதற்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது என்பதையும் கிராம மக்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். நம்ம கட்சிக்காரங்களே செல்போன்ல வீடியோவை ஓடவிட்டு என்னண்ணே இதுனு சொல்லிக் கேட்குறாங்க என்றும் அமைச்சர்கள் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் என்.ஆர்.சி. பற்றி பயமாக இருக்கிறது என்று கொடுத்த பேட்டியும், முன்னாள் எம்பி அன்வர் ராஜா இதுகுறித்து எடப்பாடிக்கும், பன்னீருக்கும் எழுதிய கடிதமும்தான் அதிமுக டாப் லெவலில் நேற்று விவாதமாகியிருக்கிறது.

அன்வர் ராஜா முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் உரிமையாக பேசக் கூடியவர். அவர் எடப்பாடியிடம், ‘இந்த விஷயத்துல மத்திய அரசுலயே ஆளாளுக்கு வேறமாதிரி சொல்றாங்க. என்.ஆர்.சி. வந்தே தீரும்னு அமித் ஷா சொன்னாரு, வராதுனு மோடி சொல்றாரு, அதுக்கப்புறம் என்பிஆர் கொண்டுவர்றோம்னு அறிவிக்கிறாங்க. ஆனால் என்பிஆர் ல பெற்றோர் பிறந்த ஆவணம் கேட்போம்னு சொல்றாங்க. ஆக அது என்.ஆர்.சி.க்கு முன்னோடி மாதிரிதான் இருக்குது. ஏற்கனவே நம்ம பேரு டேமேஜ் ஆயிடுச்சு. மைனாரிட்டி மட்டும்தான் இதனால நம்மை எதிர்ப்பாங்கனு நினைக்காதீங்க. எல்லா தரப்பு மக்கள்கிட்டையுமே உள்ளுக்குள்ள ஒரு பயம் இருக்கு. அதனால நாம உள்ளாட்சித் தேர்தலுக்குள்ள ஒரு முடிவெடுத்து அறிவிச்சா நல்லது. என்.ஆர்.சி. பற்றிய மக்களிடம் பயம் போகாதவரை தமிழக அரசு அனுமதிக்கமாட்டோம்னு அறிவியுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT

அதேபோல அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் அளித்த பேட்டிகளில், ‘முஸ்லிம்களுக்கு ஒன்னுன்னா இந்த அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது’ என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலைமையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டத் துறை அமைச்சர் சண்முகத்திடம் நேற்று இதுபற்றி முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ‘என்.ஆர்.சியை அமல்படுத்தமாட்டோம்னு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிற பிகார் சி எம் நித்தீஷ்குமார் சொல்லியிருக்காரு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, பாண்டிச்சேரினு பல மாநிலங்கள் சொல்லியிருக்காங்க. நாம அமல்படுத்தமாட்டோம்னு அறிவிக்கலாமா? இதப் பத்தி டெல்லியிலயும் பேசியாச்சு’ என்று எடப்பாடி கூற, சி.வி.சண்முகமோ, ‘இன்னும் மக்கள்கிட்ட இதப் பத்தி குழப்பம் இருக்கு. நாம குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததை திமுக பெரிய அளவுல மக்கள்கிட்ட எடுத்துட்டுப் போறாங்க. அதனால என்.ஆர்.சி பற்றி மக்களிடம் இருக்கும் பயத்தை அகற்றிவிட்டு அதன்பின்னர்தான் அமல்படுத்துவது பற்றி யோசிக்கணும்னு நாம சொல்லலாம். பிரதமரே நாடு முழுதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படாதுனு சொல்லியிருக்காரு. அமித் ஷாவும் சொல்லியிருக்காரு. அதனால தமிழ்நாடு அரசு சார்புல அறிவிக்கிறது தப்பில்லை’ என சொல்லியிருக்கிறார். நேற்று முதல்வர் எடப்பாடி அதிகாரிகள் சிலரிடம் கூட இதுபற்றியே பேசிக்கொண்டிருந்திருக்கிறார் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share