செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு வழக்கில் இன்று (ஜூன் 22) நடைபெற்ற விசாரணையில், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிமன்றத்தில் வாதிட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று காலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 22) விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு உகந்தது!
அப்போது அமலாக்கத்துறை சார்பில் காணெலி வாயிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே அமலாக்கப் பிரிவு தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அதற்கு செந்தில் பாலாஜி மனைவி தரப்பு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததே. எனவே தங்கள் தரப்பில் தான் முதல் வாதம் முன் வைக்க வேண்டும்.
கைது சட்டவிரோதம் இல்லை என்றால் தான் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு உகந்தது தான் என்று நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மேற்கோள் காட்டினார்.
மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் உள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று என்.ஆர்.இளங்கோ வாதாடினார்.
அதற்கு நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்” என்று தெரிவித்தனர்.
சஞ்சய் தய், நக்கீரன் கோபால் வழக்குகள்
இதனையடுத்து, வழக்கறிஞர் அப்பாஸ், நடிகர் சஞ்சய் தத், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், சமூக ஆர்வலர் நவ்லகா ஆகியோரது வழக்கில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மேற்கோள் காட்டி என்.ஆர்.இளங்கோ தனது வாதத்தை முன்வைத்தார்.
முதலில் ராமச்சந்திர ராவ் வழக்கில் 1972 ஆம் ஆண்டு ஆட்கொணர்வு மனுவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வாசித்தார்.
கடந்த 1994ஆம் ஆண்டு நடிகர் சஞ்சய் தத் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால் ஆட்கொணர்வு மனு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டினார்.
என்ஐஏவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் அப்பாஸ் மீது ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு, இதே உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதை இளங்கோ குறிப்பிட்டார்.
சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று நக்கீரன் கோபால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தெரிவித்தார்.
மேலும் எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் நவ்லகா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுட்டிக் காட்டிய என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து வாதாடிய இளங்கோ, ”கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15ஏ பிரிவை அம்பேத்கர் சேர்த்திருக்கிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியது அடிப்படை உரிமை. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதே தவறு.
அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்ததால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.” என்று வாதாடினார்.
ஆட்கொணர்வு மனுவுக்கு மீறிய வாதங்கள்!
மேலும், ”2014-2015 காலகட்டத்தில் தொடரப்பட்ட வழக்கில், திமுக அரசின் அமைச்சரான பிறகே கடந்த 2021ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளது” என்று என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பு, ”செந்தில் பாலாஜி மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆட்கொணர்வு மனுவுக்கு மீறிய வாதங்களை முன்வைக்க முடியாது” என்று வாதம் வைத்தது.
காவலை நீட்டிக்க கோரிய அமலாக்கத்துறை
மேலும், ”அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் வேறு ஒரு 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது.
அப்போது நவ்லகாவின் வழக்கை சுட்டிக்காட்டிய என்.ஆர். இளங்கோ, “சுனாமி அல்லது கொரோனா தொற்று எதுவாக இருந்தாலும், 15 நாட்கள் காவலை நீட்டிக்க முடியாது” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக வாதிட்டார்.
மேலும் அவர், ”ஆட்கொணர்வு மனு ஜூன் 14 காலை 10.30 மணிக்கே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிபதி மாலை 5.30 மணிக்கே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இயந்திரத்தனமாக நிராகரித்துவிட்டார்.
செந்தில் பாலாஜியை முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை தான். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை போலியானது என்றும் விசாரணையை தாமதப்படுத்தவே அவர் நடிக்கிறார் என்றும் அமலாக்கத்துறை எப்படி கூற முடியும்?
அப்படி நடிக்கும் ஒருவர் தன் நெஞ்சைக் கிழித்து இதய அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக் கொள்வாரா? அவருக்கு இதயத்திலிருந்த 4 அடைப்புகள் அகற்றம் செய்யப்பட்டது எப்படி? இந்தச் சூழலில் அறுவை சிகிச்சை போலி என அமலாக்கத்துறை எப்படி சொல்லலாம்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், “அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. அரசியல் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த லட்சுமண ரேகையை கடக்க முடியாது. ஆகவே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாட்களை அந்த 15 நாட்களிலிருந்து கழிக்க முடியாது.
இதனால் செந்தில்பாலாஜியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அதிகாரமில்லை. சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்கக்கூடாது” என என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
இப்படி என்.ஆர்.இளங்கோ மேற்கோள் காட்டிய பல்வேறு வழக்கின் தீர்ப்புகள் மற்றும் அதிரடியான வாதங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார் அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா.
அவசியம் கருதியே மேற்கோள் காட்டினேன்
அவரே ஒரு கட்டத்தில், ”ஆட்கொணர்வு மனுவுக்கு இவ்வளவு நீண்ட வாதம் அவசியமா?” என்ற கேள்வி எழுப்பினார்.
அதற்கு என்.ஆர்.இளங்கோ, “வழக்கிற்கு அவசியம் என்பதாலேயே பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கவில்லை என்றால் ஏமாற்றிவிடுவீர்கள். குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவை அமலாக்கத்துறை முறையாக பின்பற்றவில்லை என்பதே உண்மை” என்று பதிலளித்தார்.
அவகாசம் வேண்டும்
அப்போது நீதிபதிகள், ”மதியம் உங்கள் வாதத்தை தொடரலாம்” என்று துஷார் மேத்தாவிடம் கூறினர்.
இதனை எதிர்பார்க்காத அவர், ”அமலாக்கத்துறை தரப்பில் பதில் வாதங்களை மதியம் அளிப்பது கடினம், திங்கள் கிழமை பதிலளிக்க அவகாசம் வேண்டும்” என்று கூறினார்.
இதனயடுத்து செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என வழக்கை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
அமலாக்கத் துறை மாறி மாறி பேசுகிறது: என்.ஆர்.இளங்கோ