புதுச்சேரியில் கூட்டணிகளில் குழப்பம் ஏற்பட்டு தெளிவில்லாத நிலைமையில், பதவிவிலகிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமி நாராயணனன் இன்று என்.ஆர். காங்கிரசில் இணைந்தார்.
காங்கிரசிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவுக்குதான் தாவினார்கள். பாஜகவில் சேருவதற்காகவே கட்சியிலிருந்து விலகினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் முன்னாள் அமைச்சர் இலட்சுமிநாராயணன் மட்டும் முன்னாள் முதலமைச்சரான ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்.
இதைப் பற்றி விசாரித்தோம்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார், இலட்சுமி நாராயணன். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இளைஞரணியின் புதுவை பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். பிறகு காசுக்கடை தொகுதியின் எம்.எல்.ஏ.ஆக ஆனார்.
கருப்பையா மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குச் சென்றவர், அதன் பிறகு கண்ணன் தலைமையிலான புதுவை முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதற்கிடையே, காசுக்கடை தொகுதியானது ராஜ்பவன் தொகுதியாக மாறியது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் காங்கிரசில் ஐக்கியமானார்.
நாராயணசாமியின் ஆட்சியைக் கவிழ்க்கும் காட்சிகளின் ஒரு பகுதியாக, இலட்சுமி நாராயணனும் தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். பாஜகவில் சேர்வதற்காக பேச்சுவார்த்தையும் நடந்துகொண்டிருந்தது.
திடீரென திசைமாறி என்.ஆர். காங்கிரஸ் பக்கம் திரும்ப நேற்று முடிவெடுத்தார். அதன்படி இன்று காலையில் ரங்கசாமியைச் சந்தித்து அவருடைய கட்சியில் சேர்ந்துகொண்டார்.
ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் இலட்சுமிநாராயணன் ஏன் பாஜகவில் சேராமல் பின்வாங்கினார் எனும் கேள்வி எழுவது இயல்புதான்.
இந்தத் தொகுதியில் கணிசமான தலித் மக்கள் உள்பட கிறித்துவ, இசுலாமியர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேரடியாக பாஜகவில் சேர்ந்து அதன் வேட்பாளராகப் போட்டியிட்டால் வாக்குகள் கிடைக்காது என்பதால், ரங்கசாமி கட்சியில் சேர்ந்தால் அந்தப் பிரச்னை வராது என கணக்கு சொல்கிறார்கள்.
ரங்கசாமி+ பாஜக கூட்டு உறுதியானால் அப்போது மட்டும் தொகுதி மக்கள் வாக்களித்துவிடுவார்களா எனக் கேட்டால், “ நாங்கள் பாஜகவின் சார்பிலா போட்டியிடுகிறோம், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில்தானே எனக் கூறி சமாதானப்படுத்த முடியும்.” என்று தயாரித்துவைத்த விளக்கத்தை விளக்குகிறார்கள், இலட்சுமி நாராயணன் ஆதரவாளர்கள்.
இந்தக் கணக்கு சரிவருமா?
**- வணங்காமுடி**