சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று (மார்ச் 29) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணிகளுக்காக 4 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, வாக்குப்பதிவு தினத்தன்று எவ்வாறு ஒவ்வொரு அதிகாரிகளும் செயல்படுவது, வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி பார்ப்பது, வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த சந்தேகங்களை தீர்த்து வைப்பது, வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பது உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி 4 கட்டங்களாக நடைபெறும்.
பயிற்சி வழங்கப்பட்ட பின்னர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த பயிற்சி எந்த நாளில் நடைபெறும், எங்கு நடைபெறும் போன்ற விவரங்கள் முன்கூட்டியே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கட்டாயம் இந்த பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
அந்த வகையில், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19,400 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி நேற்றைய தினம் (மார்ச் 28) சென்னையில் நடைபெற்றது.
ஆனால், இந்த பயிற்சியில் 1,500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பயிற்சியில் பங்கேற்காத 1,500 பேருக்கும் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதற்கு சிலர், மருத்துவ காரணங்களால் பயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ராதாகிருஷ்ணன், “தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை (மார்ச் 30) மீண்டும் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விதி மீறியதா ராஜஸ்தான்? ரிக்கி பாண்டிங் கோபத்தில் கத்தியது ஏன்? : விளக்கம்!
பாஜக வரி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு!