கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் வெள்ளத்தால் நனைந்த புத்தகங்களை சாலையில் வைத்து காயவைத்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு கிராமம் உள்ளது.
சாத்தனூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், கன மழையின் காரணமாகவும் இந்த கிராமம் நீரில் மூழ்கியது.
இந்த கிராமமே தென் பெண்ணையாற்றின் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒரு சில மேடு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் சாலைகளும், வீதிகளும் ஆறாக மாறியுள்ளது.
இதனால் கடந்த 29ஆம் தேதி முதல் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைக்கு செல்ல முடியாதது ஒரு பக்கம் என்றால் வெள்ளத்தால் மாணவர்களின் புத்தகங்கள் நனைந்து சேதமடைந்தன.
இந்தநிலையில் முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் தார் ரோடு மற்றும் மேடான பகுதிகளில் புத்தகங்களை காய வைத்தனர்.
நான்கு நாட்களுக்கு பிறகு இன்று சூரியன் சற்று வெளிப்பட்ட நிலையில் முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகாதேவன், ஜூலிமேரி தம்பதியினரின் மகளான, பிஎஸ்சி படிக்கும் கல்லூரி மாணவி கயஸ்ரீ தனது வீட்டுக்கு வெளியே உள்ள சாலையில் புத்தகங்களை காயவைத்தார்.
இதுகுறித்து கயஸ்ரீ நம்மிடம் கூறுகையில், “கிருஷ்ணசாமி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிசிக்ஸ் படிக்கிறேன். இன்னும் ஒரு செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும். புத்தகங்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் நனைந்துவிட்டது. இனி புதிதாக புத்தகம் வாங்கினால் அதிகம் செலவாகும். எனவே சேதமடைந்த புத்தகங்களுக்கு பதிலாக வேறு யாரிடமாவது வாங்கி அதை ஜெராக்ஸ் எடுக்க வேண்டும்” வேதனையுடன் கூறினார்.
அதுபோன்று கல்லூரியில் பிஎஸ்சி படித்து வரும் மகாதேவன் ஜூலிமேரி தம்பதியினரின் மகள் ஐதீகாவும் தனது புத்தகங்களை சாலையில் காயவைத்தார்.
பள்ளி மாணவர்களும் நனைந்த புத்தக பைகளை எடுத்து அன்னகூடை, வாளி ஆகியவற்றை திருப்பி போட்டு புத்தகங்களை ஒவ்வொரு பக்கமாய் காயவைத்தனர்.
மாணவர்களின் படிப்பு மீதான ஆர்வத்தை பார்த்து அந்த பகுதி மக்கள் பாராட்டியதோடு, சேதமடைந்த புத்தகங்களுக்கு பதில் புதிய புத்தகங்களை அரசு கொடுத்தால் மாணவர்கள் நன்றாக படிப்பார்கள் என்றும் கூறி சென்றனர்.
வணங்காமுடி, பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாத்தனூர் அணை விவகாரம் : திமுக அரசுக்கு அன்புமணி வைத்த 7 முக்கிய கேள்விகள்!
திருவண்ணாமலை : ‘மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை’ – ஐஐடி பேராசிரியர் குழு!