இலங்கை அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் அரசுக்கு எதிரான மக்கள் புரட்சி வெடித்தது. பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் நிலைமை சீரடையாததால் ஆத்திரமடைந்த மக்கள் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
இதனை அடுத்து இலங்கையில் இருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 11ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் (ஐக்கிய மக்கள் சக்தி) தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை அதிபர் பதவிக்கு போட்டியிட வைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாளை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக சஜித் பிரேமதாச அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்.பி, டலஸ் அழகப்பெருமவை வெற்றிபெற வைக்க எதிர்க்கட்சிகள் உழைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
