முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் 2022-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் ஒரு வார்த்தையை கூட நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் (2011-16), போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தார் என்பது செந்தில் பாலாஜி மீதான வழக்கு. இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிரான தீர்ப்பு வழங்கியது.
2022-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு எதிராக மிக கடுமையான கருத்துகளையும் முன்வைத்தது. இந்த கருத்துகளை நீக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த், ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 2022-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் ஒரு வார்த்தையை கூட நீக்க முடியாது; தீர்ப்பளித்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்களது உத்தரவுகளில் மாற்றம் செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்யும் நடைமுறையையே ஏற்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவு எடுத்திருக்கிறது; ஆகையால் செந்தில் பாலாஜியின் மனுவை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.
மேலும் 2022-ம் ஆண்டு தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல், விசாரணை நீதிமன்றம் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை 2022-ம் ஆண்டு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
அப்போது, குற்றவியல் சட்டத்தில் அனுபவே இல்லாதவர் கூட, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான குற்றங்களை இறுதி அறிக்கையில் இருந்து விடுவித்திருக்கமாட்டார்; இதனை ஒரு தனியார் தகராறு போல மூடி மறைக்க பார்க்கின்றனர்; இந்த மோசடி குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
