தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 21) முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன். “தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தேஜ் புயல் உருவாகி உள்ளது. தொடர்ந்து தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஏமன், ஓமன் கடற்கரையை நோக்கி செல்லக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்னர் வடமேற்கு திசையிலும், வடகிழக்கு திசையிலும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து செல்ல நேரிடும்.

இந்த இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளும் நிறைவடைந்த பிறகு, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.
அடுத்த 3 தினங்களை பொருத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
மீனவர்கள் அக்டோபர் 25ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளுக்கும், அக்டோபர் 26ம் தேதி வரை வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்” என பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரபிக் கடலில் உருவானது ’தேஜ்’ புயல்… தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?
”நூறு நாளில் 10 ஆயிரம் பாஜக கொடிக்கம்பங்கள்”: அண்ணாமலை சபதம்!
