ADVERTISEMENT

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி : மிக கனமழைக்கு வாய்ப்பு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

தெற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியிருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்து பகுதியில் 22 செமீ மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

அடுத்ததாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் என பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் 29ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ”நேற்று (23-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

ADVERTISEMENT

நேற்று (23-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில் (நாளை), குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது.

24-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

25-11-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26-11-2025: தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

27-11-2025: தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28-11-2025: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால்
பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை,
மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய
வாய்ப்புள்ளது.

29-11-2025: மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

30-11-2025: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share