கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லையே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. No tolls for vehicles
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், “மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியிலும், புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியிலும் 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு அனுமதியுடன் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதம்தோறும் 11 கோடி ரூபாய் வசூலாகும் நிலையில் 30 லட்சம் ரூபாய் மட்டுமே பராமரிப்பு பணிக்காக செலவிடப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடி வழியில் உள்ள சாலைகளில் இருபுறமும் கழிப்பறை வசதிகள் இல்லை, சாலையோரங்களில் மரம் நடுவதில்லை. சென்டர் மீடியனில் செடிகளும் நட்டு பராமரிப்பது இல்லை.
ஒப்பந்தத்தை எடுத்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதுரை- தூத்துக்குடி வரை நெடுஞ்சாலையை பராமரிக்க 563 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. No tolls for vehicles
வாகன ஓட்டிகள் போதுமான சுங்க கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.
எனவே சாலையோரங்களில் மரம் செடிகள் நட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சம்பந்தப்பட்ட இரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூன் 18)நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலை சார்பில், “உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றுள்ளோம்” என்று வாதிடப்பட்டது.
மனுதாரர் சார்பில், “கடந்த வாரம் இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு தஞ்சாவூர் நீதிபதி பலத்த காயமடைந்தார். அவருடன் பயணித்த நபர்கள் உயிரிழந்தனர்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், “சுங்க கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, மதுரை டூ தூத்துக்குடி நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்தி மேம்படுத்த வேண்டும்.
சிசிடிவி கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட நவீன முறைகளை கையாண்டு தொடர் சாலை பராமரிப்பை செயல்படுத்த வேண்டும்.
கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் பொது மக்களின் வாகனங்கள் சிறு பிரச்சனை செய்தாலும் அங்கு உள்ளவர்களை வைத்து தாக்கக்கூடிய சூழல் உள்ளது” என்று வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். No tolls for vehicles
