மல்யுத்த வீராங்கனைகள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
ஆனால், ”பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்வதற்கும் மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கவும் போதிய ஆதாரம் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்” என்று டெல்லி போலீஸ் கூறியதாக ஏ.என்.ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து டெல்லி போலீஸ் இன்று (மே 31) தனது ட்விட்டர் பக்கத்தில் , “இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இல்லை என்றும் இந்த வழக்கின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தவறான செய்தியாகும். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிறிது நேரத்திலேயே டெல்லி போலீஸ் இந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்த பதிவை போலீஸ் ஏன் நீக்க வேண்டும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
அதேசமயம், “என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார். மல்யுத்த வீராங்கனைகள் தங்களிடம் ஆதாரம் இருந்தால் அதனை நீதிமன்றத்தில் கொடுக்கலாம். எந்த தண்டையையும் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “மல்யுத்த வீராங்கனைகள் போலீசையும், உச்ச நீதிமன்றத்தையும், விளையாட்டுத் துறை அமைச்சகத்தையும் நம்ப வேண்டும். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதுவரை பொறுமையாக காத்திருங்கள். வீரர்கள் விளையாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மோனிஷா
ராமேஸ்வரத்தில் இருந்து நடைப் பயணம்: அண்ணாமலை அறிவிப்பு!
“ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார்” – அமைச்சர் பொன்முடி மீண்டும் குற்றச்சாட்டு!
Comments are closed.