தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை… திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் திமுக, அதிமுக என எந்த பெரியக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 23) திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் யாருக்கும் நாங்கள் பங்கு வழங்கியதில்லை. எத்தனை கட்சி வந்தாலும் கூட்டணி இருக்கும், இடம் கேட்பார்கள், அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் கொடுத்தது இல்லை” என்றார்.
மேலும் அவர், சாதாரண குடிமகன் பாதித்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பவர் முதல்வர் ஸ்டாலின். வேண்டியவர், வேண்டாதவர் என பார்க்கமாட்டார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறார்.
கடந்த ஆட்சியில் இருந்தவர்களே குட்கா வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்த ஒரே அரசு திமுக அரசுதான்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அதிகமான அக்கறை எடுத்து வருகிறார். எல்லாம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள், சாதாரண மனிதர்கள் என யார் வேண்டுமானாலும் முதல்வரைச் சந்திக்கலாம். தவறை கண்டும் காணாமல் இருக்கும் அரசு இந்த அரசு இல்லை.
அரசுக்கு சிறு கரும்புள்ளி கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்” என்றார்.
கூட்டணி இல்லை என்றால் ஆட்சிக்கு வரமுடியாது என்ற கே.பாலகிருஷ்ணனின் கருத்துக்கு அவர் பதிலளிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்!