மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும் தமிழக அரசு வைத்துக் கொள்ளக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். no relationship with siddaramaiah : ramadoss
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து விவாதிக்க வரும் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா உட்பட 7 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
தலைகீழாக நின்றாலும் முடியாது! no relationship with siddaramaiah : ramadoss
ஆனால் அடுத்த சில மணி நேரத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா நேற்று அறிவித்தது அதிர்ச்சி அளித்தது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட முடியாது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை முடித்ததாக கூறும் கர்நாடகத்திற்கு அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆயத்தப் பணி மேற்கொள்வதே சட்டவிரோதம்! no relationship with siddaramaiah : ramadoss
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார்.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதைத் தடுக்காமல் மத்திய அரசும், தமிழக அரசும் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய சித்தராமய்யா, மேகதாது அணை கட்டுவதால் மூழ்கும் நிலங்களை அடையாளம் காணும் பணியும், இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் மரங்களை எண்ணும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். இப்போது அந்தப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக கர்நாடகம் தெரிவித்திருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.
காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணையை கட்ட முடியாது. இதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்த உமாபாரதி உள்ளிட்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வதே சட்டவிரோதம் ஆகும்.

இழைக்கப்பட்ட இரண்டு துரோகம்!
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை பாலைவனமாகிவிடும்.
ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் இதைக் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகத்தின் செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் அணைக்கான ஆயத்தப் பணிகளை முடிக்கும் அளவுக்கு கர்நாடகம் சென்றிருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கான முதல் துரோகம் கடந்த 2018ஆம் ஆண்டில் தான் இழைக்கப்பட்டது. அப்போது தான் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது.
அதற்கு அடுத்த துரோகம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இழைக்கப்பட்டது. மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை ஆய்வு செய்து, அனுமதி அளிக்கும் பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறி, மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்படைத்தது.

அழைப்பை ரத்து செய்ய வேண்டும்! no relationship with siddaramaiah : ramadoss
ஆனால், அதற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் கர்நாடக அரசு துணிச்சல் பெற்று, மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்திருக்கிறது. இதற்குப்பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். அதை மத்திய அரசு உடனடியாக செய்வதுடன், மேகதாது அணை குறித்த எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
இன்னொருபுறம் மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வைத்துக் கொள்ளக் கூடாது. மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து விவாதிக்க வரும் 22-ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு கூட்டியுள்ள 7 மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.