தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும், பிஎப்ஐ தடையால் போராட்டங்களும் நடந்து வருவதால் எந்த ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் அதே நாளில் வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாக திருமாவளவன் அறிவித்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.
ஆனால் இந்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.
மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில்,
ஆர். எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா

Comments are closed.