8வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தவுடன் அகவிலைப்படியும் அடிப்படை சம்பளமும் எப்படி இருக்கும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், அகவிலைப்படி (DA) விஷயத்தில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் அரசு திட்டம் தற்போது இல்லை என மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8ஆவது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, இந்த ஊதியக் குழுவின் விதிமுறைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலை குறித்து ஊழியர் சங்கங்கள் தெளிவுபடுத்தக் கோரிக்கை வைத்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் பதாரியா மக்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்று கேட்டார்.
இதற்கு மத்திய நிதி அமைச்சகம் பதிலளித்தபோது, இந்த ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தது. ஆனால், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தனது எழுத்துப்பூர்வ பதிலில், நவம்பர் 3ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம் 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். ஆனால், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து கேட்ட கேள்விக்கு, அமைச்சர் “தற்போது அரசுக்கு அத்தகைய எந்த முன்மொழிவும் இல்லை” என்று பதிலளித்தார்.
இதன் மூலம், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் திருத்தி அமைக்கும் தற்போதைய முறையையே மத்திய அரசு தொடர்ந்து பின்பற்றும் என்பது தெரிகிறது. 8வது சம்பள கமிஷனின் விதிமுறைகள் குறித்து ஊழியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் குழுக்களும் கவலைகளை எழுப்பி வருகின்றன. இது ஓய்வூதிய திருத்தங்களுக்கான வாய்ப்பைக் குறைப்பதாகவும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் சங்கங்கள் வாதிடுகின்றன.
புதிய சம்பளக் கட்டமைப்பு எப்போது முதல் அமலுக்கு வரும் என்பது குறித்த தேதி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இது 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருமா அல்லது வேறு ஏதேனும் தேதியா என்பது குறித்து ஊழியர்களிடையே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
