அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை-முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Mathi

MK Stalin HIndi

தமிழ்நாட்டில் “அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜனவரி 25-ந் தேதி மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க (மொழிப் போர் ஈகியர்) நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 1938-ம் ஆண்டு தொடங்கி 1965-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பல்வேறு இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

1938-ல் தாளமுத்து, நடராசன் தொடங்கி 1965-ல் நூற்றுக்கணக்கான தமிழர்கள், தாய் மொழியாம் தமிழைக் காக்க, இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தியாகங்களைப் போற்றும் வகையில் ஜனவரி 25-ந் தேதி மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்- அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!

ADVERTISEMENT

மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.

ADVERTISEMENT

தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.

மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share