அன்புமணியின் நடைப்பயணத்துக்கு அனுமதி இல்லை என்று தமிழக டிஜிபி சங்கர் ஜுவால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்ற பெயரில் 100 நாள் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று (ஜூலை 25) மாலை திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ், அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது நடை பயணத்தை தொடங்கினார்.
100 நாள் நடைபெறும் இந்த பயணம் நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையும் என்று அன்புமணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று (ஜூலை 26) செங்கல்பட்டு, உத்திரமேரூர், நாளை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 28 அம்பத்தூர், மதுரவாயல், ஜூலை 31 கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 1 திருவள்ளூர், திருத்தணி, ஆகஸ்ட் 2 சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 3 ஆற்காடு, வேலூர், ஆகஸ்ட் 4 வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் 100 நாள் நடை பயண பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நடைபயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மாவட்ட எஸ்பி மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சங்கர் ஜுவால் நேற்று (ஜூலை 25) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ‘அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு என இரு குழுக்களுக்கு இடையே குழப்பம் நீடிப்பதால் மோதல் ஏற்படக்கூடும். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு அன்புமணியின் நடைபயணத்துக்கு பாமக நிறுவனரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் அனுமதி வழங்கக் கூடாது.
நடைப்பயண நிகழ்ச்சிக்கான அனுமதி நிராகரிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கு தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
