அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை – உயர் நீதிமன்றம் விளக்கம்!

By Kavi

|

Published on 28 Apr 2026, 6:13 PM

நகராட்சி நிர்வாக துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மூன்று கடிதங்களை அனுப்பியது.

ADVERTISEMENT

இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில், ‘அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு  செய்ய வேண்டும்” என்று கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

ADVERTISEMENT

ஆனால், இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக, இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல, அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசும், அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த வழக்குகள் நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று (ஏப்ரல் 28) விசாரணைக்கு வந்தது. 

அப்போது நேரு சார்பில்,   மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி சென்னை உயர் நீதிமன்றத்தில்  ஆஜரானார். அவர்,  “அமைச்சர் தரப்பு வாதத்தை கேட்காமலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மறுஆய்வு மனுவின் அடுத்த விசாரணை வரை இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் ” என்று வாதங்களை முன்வைத்தார். 

இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி,  “ஜூன் மாதம் நடைபெறும் அடுத்த விசாரணை வரை நீதிமன்ற அவமதிப்பு மனுவை பெரிதுபடத்தப்போவதில்லை” என்று கூறினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  குறிப்பிட்ட நபருக்கு (அமைச்சர் நேரு) எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்க வேண்டும் என்பதால், விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதுவரை வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என நேரு தரப்பில் கேட்கப்பட்டது.

எனினும்,  எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் தமிழக அரசு மற்றும் அமைச்சர் நேருவின் மறு ஆய்வு மனுக்களையும், இன்பதுரையின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூன் 4 வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel