மீண்டும் தலைவரானார் பரூக் அப்துல்லா

Published On:

| By Kalai

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக மீண்டும் பரூக் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1983-ம் ஆண்டில் இருந்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக பரூக் அப்துல்லா உள்ளார். தற்போது 85 வயதான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக கடந்த மாதம் அறிவித்தார்.  

பரூக் அப்துல்லாவை தொடர்ந்து அவரது மகன் உமர் அப்துல்லா கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக மீண்டும் பரூக் அப்துல்லாவே தேர்வு  செய்யப்பட்டுள்ளார். 

கட்சி நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லாவின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மசோலியம் அருகே நடைபெற்ற தேசிய மாநாட்டு கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பரூக் அப்துல்லா கட்சியின் தலைவராக வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர். கட்சியினரின் விருப்பத்தை ஏற்று மீண்டும் தலைவரானார் பரூக் அப்துல்லா.

முன்னதாக கட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை பரூக் அப்துல்லாவிற்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பரூக் அப்துல்லாவுக்கு ஆதரவாக காஷ்மீரில் இருந்து 183 பரிந்துரைகளும், ஜம்முவில் இருந்து 396 பரிந்துரைகளும், லடாக்கிலிருந்து 25 பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

காஷ்மீரில், செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாட்டு கட்சி முக்கியமானது.  பரூக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி பலமுறை காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

விஜய்யின் `தளபதி 67′ படம் பூஜையுடன் தொடங்கியது!

ரசிகர்களை ஈர்க்கும் ஃபிஃபா இட்லி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share