தமிழக பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் இனி இருக்கைகளை ‘ப’ வடிவில் அமைக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. No More Last Bench in TN Schools
பொதுவாக பள்ளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் மாணவர்கள் உயரம் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமர வைக்கப்படுவர்.
இந்த நிலையில் வகுப்பறைகளில் இருக்கை இருக்கும் அமைப்பை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இன்று (ஜூலை 12) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். No More Last Bench in TN Schools
அதில், பள்ளிகளில் வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை மாணவர்கள் கவனிக்க இயலாத நிலை இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை இனி ‘ப’ வடிவில் அமைக்க வேண்டும். இந்த நடைமுறை அனைத்து மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவும், ஆசிரியர்களை கவனிக்கவும் வசதியாக இருக்கும். இதனால் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்று விளக்கி உள்ளார்.
கேரளாவில் வெளியான ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம் கிராமப்புற மாணவர்கள் கடைசி இருக்கையில் அமர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசியது. இதைத்தொடர்ந்து கேரள அரசு மாணவர்கள் வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் அமரும் வகையில் மாற்றம் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
