அமெரிக்கா முழுவதும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஆட்சி மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது No Kings என்ற முழக்கத்துடன் சுமார் 70 லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து டிரம்ப் அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இது அமெரிக்கா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நேற்று 2700 நகரங்களில் சுமார் 70 லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பான நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் மட்டும் 1,00,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது மன்னர்கள் இல்லை.. ஜனநாயகம் சாம்ராஜ்யம் அல்ல.. மக்களுக்கே அதிகாரம்..என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் முழக்கங்களை முன் வைத்தனர். மேலும் வாஷிங்டன், பாஸ்டன், அட்லாண்டா, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
இந்த போராட்டங்கள் குறித்து டிரம்ப் தனது பதிவு ஒன்றில்,’இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது’ போராட்டக்காரர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுகின்றனர். நான் மன்னர் இல்லை, அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில், அவரை கிரீடத்துடன் மன்னராக சித்தரித்து வெளியான வீடியோக்களையும், பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், மன்னர் டிரம்ப் என்று குறிப்பிடப்பட்டுள்ள போர் விமானத்தில் விமானியாக அரசர் போல கிரீடம் அணிந்து உட்கார்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப், போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது கழிவுகளை வீசுகிறார். அப்போது டேஞ்சர் ஜோன் என்ற பாடலும் ஒலிபரப்பாகிறது.
