வேப்பந்தட்டை ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேரோட்ட வழக்கில், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா? என்று ஆய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. no KattaPanchayat in the temple issue
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேர் திருவிழா கடந்த மே 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருந்தது.
இந்தசூழலில் தங்கள் தெருவின் வழியாகத் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆண்டுதோறும் நடப்பது போலத்தான் நடக்கும் என்று கூறினர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி தேர் இழுக்கும் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தேரை சுற்றி போலீசார் பேரிகார்டுகள் போட்டிருந்தனர்.
ஆனால் அந்த பகுதி மக்கள் தேரை இழுக்க அனுமதிக்க வேண்டும் என்று பேரிகார்டுகளை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர் இழுக்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதை கண்டித்து வேப்பந்தட்டை வணிகர் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தசூழலில் ஶ்ரீ வேத மாரியம்மன் கோயிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போதுநீதிபதி வேல்முருகன் முன்னிலையில், அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் குறிப்பிட்ட தெரு குறுகலாக இருக்கிறது. அதற்குள் தேரை இழுத்துச் சென்றால் சிக்கலாகிவிடும் என்று கூறினார்.
இதை விசாரித்த நீதிபதி, கோயில் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
மேலும் ஸ்ரீவேத மாரியம்மன் கோயில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா? அதாவது அந்த தெருவில் நீளம், அகலம் என்ன? தேரின் நீளம் அகலம் என்ன? என்று ஆய்வு செய்து பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். no KattaPanchayat in the temple issue