சில திரைப்படங்களின் ட்ரெய்லர் முதன்முறையாகப் பார்த்தவுடனேயே ஈர்ப்பைத் தரும். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். பிரமிப்பைத் தருகிற பிரமாண்டமான ‘மேக்கிங்’ அதில் இருக்க வேண்டும் என்பதில்லை. சிறிய பட்ஜெட்டில் தயாரானாலும் கூட, ‘தண்ணீர் குடிக்க குடிக்க அடங்காத தாகம் போல’ நம்முள் ஒரு வேட்கையை அந்த ட்ரெய்லர் தர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வைத் தருகிறது ‘மெட்ராஸ் மேட்னி’ பட ட்ரெய்லர். No intimate scenes with the heroine – Kali Venkat
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிற இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். கார்த்திகேயன் மணி இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மே 27) சென்னையில் நடைபெற்றது.
படத்தில் பணியாற்றியிருக்கிற காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிபிரியன், விஸ்வா, சாம்ஸ், கீதா கைலாசம், அபிஷேக் ராஜா, ஆனந்த், பாலசாரங்கன், சினேகன், எஸ்.ஆர்.பிரபு, கார்த்திகேயன் மணி ஆகியோரோடு காளி வெங்கட்டின் சகாக்களாக ரமேஷ் திலக்கும் கலையரசனும் இதில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவின் இறுதியில் காளி வெங்கட் பேசினார்.
’குழந்தைகளின் ஸ்பரிசத்தை ‘மிஸ்’ செய்கிற ஒரு தந்தையின் உணர்வைப் பேசுகிறது மெட்ராஸ் மேட்னி. எலைட் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அந்த குறை தெரியாது. நிச்சயம் நடுத்தரக் குடும்பத்தினர் அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாவார்கள்.
எனது தந்தை அப்படிப்பட்ட நிலையில் இருந்ததை நான் கண்டிருக்கிறேன். அதனால், இந்த கதையைக் கேட்டதும் ஒப்புக்கொண்டேன். இந்த படம் பார்க்கும்போது அவரவர் தந்தையின் வாசனையை ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று சொன்னார் காளி வெங்கட்.
படத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்லி வந்தவர், மேடையில் தனக்கு ஜோடியாக நடித்த ஷெல்லியைப் பார்த்ததும் சிறிது இடைவெளி விட்டு பேசத் தொடங்கினார்.
“உங்களை ஷெல்லின்னு கூப்பிடுறதுக்கே இப்பதான் தைரியம் வந்திருக்குது. படத்துல முத்தக்காட்சிகள், நெருக்கமான காட்சிகள் ஏதும் இல்லை. அதனால உங்களோட நெருங்கிப் பழகறதுக்கும் வாய்ப்பில்லை.
ஒரு இடைவெளி இருந்துகிட்டே இருந்ததால மேடம்னு சொல்லிட்டே இருந்தேன். அப்புறம் உன்னை காளின்னு சொல்லணும்னா, என்னை ஷெல்லின்னு கூப்பிடணும்னு சொன்னீங்க. அன்னியில இருந்து ஷெல்லின்னு கூப்பிட ஆரம்பிச்சேன்” என்று கூறினார்.
அது மட்டுமல்லாமல், ஷெல்லியோடு நடிப்பதிலும் கொஞ்சம் தயக்கம் இருந்ததாகச் சொன்னார்.
”மலையாள நடிகர்கள்னா பயங்கரமா நடிப்பாங்கன்னு ஒரு கருத்து இருக்குது. அந்த பயத்துலதான் ஷெல்லியை அணுகினேன். அவங்களும் பயங்கரமா நடிச்சாங்க. அதனால, அவங்களை எதிர்கொண்டு சேர்ந்து பயணிச்சிரணும்கற சவால் எனக்கு இருந்தது. அதனால, இன்னும் யதார்த்தமா நடிக்க முடிஞ்சது” என்று படப்பிடிப்பு அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
இந்த பேச்சின் இடையே, ”மலையாள சினிமாவில் இருக்கிற நல்ல திரைப்படங்களை மட்டும்தான் நாம் பார்க்க நேரிடுகிறது. எல்லா திரையுலகையும் போல, அங்கேயும் சில சுமாரான படங்கள் வரத்தான் செய்கிறது” என்ற கருத்தையும் சொன்னார் காளி வெங்கட்.
’இனிமே சினிமா நியூஸ்ல என்னோட பேர் வந்தே ஆகணும்’ என்கிற வகையில் மனிதர் பேச ஆரம்பிச்சுட்டார் போல.. வாழ்த்துகள்!