கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் போலீஸ்

Published On:

| By Jegadeesh

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் சக்தி பள்ளி மாணவி மரணம் பற்றிய விசாரணை பற்றி முத்திரையிடப்பட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில்  இன்று (ஜூலை 29 ) தமிழக அரசு தாக்கல் செய்தது.

கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் சக்தி  பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஓர் ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்தவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று ( ஜூலை 29 ) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி உடற்கூறாய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டதாகவும் அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்றை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார். பின்னர் டி.ஐ.ஜி. தலைமையில், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவி மரணம் மற்றும் கலவரத்தின் போது வதந்தி பரப்பிய 63 யுடியூப் சேனல்கள் , 31 டிவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் நடத்தப்படும் விசாரணைகள் காவல்துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் , மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். மற்றொரு குற்ற வழக்கில் பள்ளி தாளாளர் தொடர்புடையதால் இதுகுறித்து விசாரித்து வருவதாக தெரிவித்த அசன் முகமது ஜின்னா அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ( ஆகஸ்ட் 29 )ஆம் தேதிக்கு  தள்ளி வைத்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share