ஈபிஎஸுக்கு எதிரான முறைகேடு புகார் : தமிழக அரசு வைத்த முக்கிய வாதம்!

Published On:

| By Kavi

11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் கட்டப்பட்டன. 

ADVERTISEMENT

ஆனால் இந்த மருத்துவ கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை  என்றும் இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், மத்திய அரசின் 60 சதவிகிதம் நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 

ADVERTISEMENT

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ நேரடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க கூடாது என்று 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பித்த அரசாணை ரத்து செய்ய வேண்டும். 

எனது புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. 

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஆஜராகி தமிழில் வாதாடினார். 

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம். எனவே ஆங்கிலத்தில் தான் வாதாட வேண்டும் என்று கூறினர். 

மேலும் மனுதாரரிடம் என்ன தொழில் செய்கிறீர்கள் என்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு மனுதாரர் ராஜசேகரன், நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன் என்று கூறினார். 

அப்போது நிலத்தை பாதுகாத்து விவசாயத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் ஆங்கிலம் தெரியாமல் எப்படி மனு தாக்கல் செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பினர். 

அதற்கு தமிழில் எழுதியதை ஏஐ மூலம் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தேன் என்று மனுதாரர் பதில் அளித்துள்ளார். 

இதைக் கேட்ட நீதிபதிகள் மனுதாரர் நேரடியாக ஆஜராகி வாதிட அனைத்து சுதந்திரமும் உள்ளது. ஆனால் இந்த மனு தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரை நியமித்து வாதாட மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று கூறி வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். 

அதன்படி இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 16) விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அசோக்குமார் ஆஜராகி வாதிட்டார்.

அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், மனுதாரரின் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தினர். 

இதில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருக்க முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாரர் அளித்த குற்றச்சாட்டுக்கும் முகாந்திரம் இல்லை. 

இது தொடர்பாக ஊழல் தடுப்புத் துறை ஆணையருக்கு அனுப்பிய அறிக்கை தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டது என்று கூறினார். 

இதற்கு மனுதாரர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வாழ்க்கை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இல்லை என்று முடித்து வைக்கப்பட்ட மனுவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினர். 

இது தொடர்பாக உச்ச உயர்நீதிமன்ற உத்தரவுகளை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். 

அதிமுக அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று, அதற்கான நிதியினையும் ஒதுக்கி அந்த பணியை விரைவில் முடித்தது. இது தனது அரசின் முக்கிய சாதனை என்று எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டங்களில் அடிக்கடி சுட்டிக்காட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share