தொடங்கிய முருகன் மாநாடு : கருவறைக்குள் பாகுபாடு கூடாது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆகஸ்ட் 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனி மலையில் உள்ள முருகன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளனர்.

ADVERTISEMENT

பழனியே விழாகோலம் பூண்டிருக்கும் நிலையில் முத்தமிழ் முருகன் மாநாட்டு நுழைவாயிலை இன்று காலை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். மாநாட்டையொட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிவைக்கப்பட்டது.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், “கோயிலிலேயே குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்” என்று பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும் அவர், “பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த போது அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்த பட்டியலை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டிருந்தேன்.  அதுகுறித்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர் சிறுவாபுரி, காந்தன் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்தர்களின் நலனுக்காக கோயில் வளர்ச்சி பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

இதற்காக 58.77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அறுபடைவீடு முருகன் கோயில்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 251 பணிகள் நடந்து வருகின்றன. அறுபடைவீடு அல்லாத முருகன் கோயில்களில் 277 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 588 பணிகள் நடந்து வருகின்றன.

69 முருகன் கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயில் சார்பாக நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு இந்த ஆண்டு மதிய உணவும் வழங்கப்படுகிறது.

பழனி கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் திருவிழாக்களுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் 3000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இது 4000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுதவிர 54 ஓய்வூதியதாரர்களுக்கு 2000 ரூபாய் உயர்த்தி வழங்குகிறோம்.

2024 முதல் தற்போது வரை 813 நபர்கள் அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்காக கட்டணமில்லா முடிக்காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் 5000 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது” என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளை பட்டியலிட்டார்.

மேலும் அவர், “ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோயில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்” என்றும் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்: அரசு விளக்கம்… போராட்டம் தொடரும் – எடப்பாடி திட்டவட்டம்!

கூடுதல் திரைகளில் டிமான்டி காலனி 2 !

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share