ராகுல் பதவி பறிப்புக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ராம சீனிவாசன்

Published On:

| By christopher

ராகுல் காந்தியின் சிறை தண்டனை, எம்பி பதவி பறிப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பாஜக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மேலமடை ரிங் ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் மற்றும் பாஜக ஓபிசி அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் ஆகியோர் இன்று(மார்ச் 25) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராம சீனிவாசன் பேசுகையில், “பொதுவாகவே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குகள் நாடு முழுக்க பதிவாகி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கம் மற்றும் நரேந்திர மோடியை அவதூறாக அவர் பல இடங்களில் பேசியிருக்கிறார்.

மிகப்பெரிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் ராகுல் காந்தி. அவர் போன்று அவதூறாக யாரும் இதுவரை இந்திய அரசியலில் பேசியதில்லை. அரசியல் நாகரிகம் தெரியாதவர் ராகுல் காந்தி. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அதற்கு ராகுல் காந்தி வருத்தமும் தெரிவித்தார். அவதூறு பேசுவதும் அதற்காக மன்னிப்பு கேட்பதும் அவரது அரசியலில் வாடிக்கையாக இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது எல்லா திருடர்களும் மோடி என்று பெயர் வைத்துள்ளார்கள் என்று மிகவும் அவதூறாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். இந்தியா முழுவதும் ஓ.பி.சி அணி சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி விவகாரத்தில் சூரத் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இதற்கும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ராகுல் காந்தியிடம் சூரத் நீதிமன்றம் பொது மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அவர் வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் பிடிவாதமாக நடந்து கொண்டது. மன்மோகன் சிங்கை ஒப்பிடும்போது ராகுல் காந்தி சின்னப் பையன் தான்.

அவரது சொந்த விருப்பத்தின் பேரில் தான் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டார். அவரது விருப்பத்தை தான் சபாநாயகர் நிறைவேற்றி இருக்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பை அரசியலாக்கி பாஜக மீது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியே ராகுல் காந்தி எம்பியாக இருக்க விரும்பவில்லை. அதனால்தான் காங்கிரஸ் கட்சி இது குறித்து மேல்முறையீடு செய்யவில்லை. ராகுல் காந்தி குடும்பம் தியாகம் செய்த குடும்பம், பிரதமர் பதவியே தியாகம் செய்தவர் ராகுல் காந்தி என்று காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.

பிரதமர் பதவியே தியாகம் செய்த காங்கிரஸ் கட்சி, எம்பி பதவிக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே. ராகுல் காந்தி சிறை தண்டனை மற்றும் பதவி நீக்கத்திற்கும், பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

ராகுல் காந்தி திட்டியது பிரதமர் மோடியை மட்டுமல்ல மோடி என்ற ஒட்டுமொத்த சமுதாயத்தையும். காங்கிரஸ் கட்சி திமுகவின் கூட்டணி அதனால் கூட்டணியாக சேர்ந்து இந்த விவகாரத்தை கண்டித்து வருகின்றனர்.

நீதிமன்ற நடவடிக்கையை அரசியல் கட்சி மீது திணிக்கக் கூடாது. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, எம்பி பதவி பறிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவு. காங்கிரஸ் கட்சி இது குறித்து மக்கள் முன்பு நின்று பதில் கூற வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்திய மக்கள் முன்பு நின்று பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று ராம சீனிவாசன் பேசினார்.

இராமலிங்கம்

“மோடி என்றால் ஊழல்”- குஷ்புவுக்கு என்ன தண்டனை? கொதிக்கும் காங்கிரஸ்

‘என்4’ விமர்சனம்: இடைவேளையில் தொடங்கும் படம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share