நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை (மார்ச் 9) விவாதம் நடைபெற உள்ளது.
நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் ஜனவரி 28-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டுவதற்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராகுல் காந்திக்கு அனுமதி தரப்படவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கினர். மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 118 எம்.பிக்கள் கையெழுத்திட்டனர். ஆனால் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் யாரும் இதில் கையெழுத்திடவில்லை.
இந்த பின்னணியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை மார்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
மக்களவையில் நாளை சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தின் போது சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா அமராமல் ஆளும் கட்சி எம்.பிக்கள் வரிசையில் அமர்ந்திருப்பார்.
என்ன நடைமுறை?
மக்களவை நாளை காலை கூடியதும்
- சபையை நடத்தும் பொறுப்பு சபாநாயகர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவார்
- நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 50 எம்.பி.க்கள் ஆதரித்தாலே போதும்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட ந்வேண்டும்.
- இந்த விவாதங்களின் முடிவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
