கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து முடிவேடுப்பார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (நவம்பர் 20) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அதிமுகதான்.
தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, அஇஅதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது! சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மும்பையில் குறைந்த வாக்குப்பதிவு : பாடகி ஆஷா போஸ்லே கோரிக்கை!