அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Published On:

| By Kalai

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறையில் துணை ஆணையர் அந்தஸ்தில் வேலை பார்த்து வந்த ஐஏஎஸ் அதிகாரியான மோகன்ராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த்சந்த்போத்ரா என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

ADVERTISEMENT

கடனை திருப்பி செலுத்த  கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல்  திரும்பி வந்ததால் ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்போதைய தலைமைச் செயலாளரிடம் பைனான்சியர் போத்ரா புகார் செய்திருந்தார்.

ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி  சென்னை உயர் நீதிமன்றத்தில்  போத்ரா கடந்த 2016 ம் ஆண்டு வழக்கு  தொடர்ந்திருந்தார்.  பைனான்சியர் போத்ரா மறைவை அடுத்து ,அவரது மகன் ககன்போத்ரா இந்த வழக்கை நடத்தி வந்தார்.

ADVERTISEMENT

வழக்கின் இறுதி விசாரணை இன்று(நவம்பர் 5) நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது.

அப்போது, “மோகன்ராஜ் மீது ஏற்கனவே பல மோசடி புகார்கள் உள்ளன. எனவே உரிய நடவடிக்கை எடுக்க  உத்தரவிடவேண்டும்” என்று போத்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை  வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், புகார் குறித்து விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க தலைமைச்செயலாளர் ,சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, புகார் கொடுத்த காலகட்டத்தில், நடவடிக்கை எடுக்காத  அதிகாரிகள் மீது , உரிய நடவடிக்கையை தலைமைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களுடைய நலன் கருதி, தங்களுடைய கடமைகளை,அரசு அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்க கோரி  சில விவரங்களோடு புகார்கள் தரப்பட்டால் அந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால், அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை போய்விடும், மேலும் உடனடி நடவடிக்கைகள் எடுக்காமல் தவிர்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் எச்சரித்துள்ளார்.

அதிகாரிகள் அதிகப்படியான காலதாமதம் செய்து, அதனால் எதிர்காலத்தில்  நடவடிக்கைகளை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கலை.ரா

பரங்கிமலை மாணவி கொலை : சதீஷ் மீது பாய்ந்தது குண்டாஸ்!

மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share